ஹிஜாப் அணிவது சட்டப்படி அவசியமில்லை – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Share this News:

பெங்களூரு (15 மார்ச் 2022): வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதி அல்ல என்று கூறியுள்ளது.

உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகப் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

பள்ளிச் சீருடையை பரிந்துரைப்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு மட்டுமே; அரசியலமைப்பு ரீதியாக இது அனுமதிக்கப்படுகிறது; இதை மாணவர்கள் எதிர்க்க முடியாது என்று நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மேலும் குறிப்பிட்டது.

“முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்” என உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வுக்கு தலைமை தாங்கிய தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பையொட்டி கர்நாடகாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஹிஜாப் அணிய அனுமதி கேட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல் முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.


Share this News:

Leave a Reply