ஹிஜாப் தடையால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

574

பெங்களூரு (18 மார்ச் 2022): ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல முடியாத முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணியாமல் தேர்வெழுத மற்றொரு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் பல மாணவிகள் நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு முன்பு ஹிஜாப் விவகாரத்தால் தேர்வை புறக்கணித்தனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு எழுத மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற பாஜக எம்எல்ஏ ரகுபதி பட்டின் கோரிக்கைக்கு பதிலளித்த சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் முன் தேர்வை புறக்கணித்தவர்களை அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார். “முதலமைச்சரிடம் கலந்தாலோசித்த பிறகு இதுகுறித்து அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

அதேவேளை, “உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குப் பிறகு தேர்வைத் தொடர்ந்து புறக்கணிப்பவர்களுக்கு அரசாங்கம் மற்றொரு வாய்ப்பை வழங்க முடியாது இது உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவது மற்றும் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவது சாத்தியமில்லை. இது எனது கருத்து” என்று கூறினார்.

இதைப் படிச்சீங்களா?:  மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசியருக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை!

உடுப்பி பாஜக எம்.எல்.ஏ கூறுகையில்,கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறிக்கை வெளியிடுவோர் மற்றும் போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல உயர்நீதிமன்ற உத்தரவை பகிரங்கமாக விமர்சித்ததை ஆட்சேபித்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், “உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியல்ல என்று யாராவது கருதினால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யட்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் தீர்ப்பை வெளிப்படையாக விமர்சித்து பந்த் நடத்துவது சரியல்ல. இதை அரசு அனுமதிக்கக் கூடாது” என்றார்.

இதற்கிடையில், இதற்கு குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் பலர் மகிழ்ச்சியாக இல்லை. இதற்காக அவர்கள் அமைதியாக போராட்டம் நடத்த உரிமை உண்டு,” என்று அவர் மேலும் கூறினார்.