பிரபல மலையாள செய்தி சேனல் மீடியா ஒன்னுக்கு மத்திய அரசு தடை!

481

திருவனந்தபுரம் (01 பிப் 2022): பிரபல மலையாள தொலைக்காட்சி சேனல் மீடியாஒன் டிவி ஒளிபரப்புக்கு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

மீடியா ஒன் சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்ததை அடுத்து, சேனலின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான அனுமதியை அமைச்சகம் மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடையை நீக்க சட்டப்பூர்வ செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாகவும், தற்போது ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீடியாஒன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக மீடியாஒன் டிவி செப்டம்பர் 30, 2021 முதல் செப்டம்பர் 29, 2031 வரை ஒளிபரப்பு அனுமதிகளைப் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது

மீடியாஒன் தொலைக்காட்சியின் ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த சேனலை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் சேனல் இன்னும் அது குறித்த விவரங்களைப் பெறவில்லை. தடை குறித்த விவரங்களை மத்திய அரசு மீடியாஒன் டிவிக்குக் கிடைக்கச் செய்யவில்லை. தடைக்கு எதிராக நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம் செயல்முறை முடிந்ததும், சேனல் பார்வையாளர்களுக்குத் திரும்பும். கடைசியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ எம்.கே.முனீர் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். “மீடியா ஒன் உரிமத்தை ரத்து செய்யும் அமைச்சகத்தின் முடிவு தன்னிச்சையானது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது விமர்சனக் குரல்களை அமைதிப்படுத்துவதாகும். தடை நிறைவில் நீங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடைய டெல்லியில் நடந்த வன்முறையைப் பற்றிய செய்திகளின் போது, ​​1994 ஆம் ஆண்டு கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகளின் விதிகளை மீறியதாக மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டு பின்பு ஒளிபரப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.