அச்சுறுத்தும் கொரோனா – கேரளாவில் மருத்துவ அவசர நிலைக்கு கோரிக்கை

399

திருவனந்தபுரம் (29 செப் 2020): கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தின்தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆரம்ப கட்டத்திலிருந்தே கொரனோ தடுப்பு நடவடிக்‍கையை அம்மாநிலம் சிறப்பாக கையாண்டு, பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைவாகவே வைத்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக, கேரளாவில் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மூன்று இலக்கங்களில் இருந்த பாதிப்பு, நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 445 வரை உயர்ந்தது. இதனால் கேரளாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி.கே.கே.ஷைலஜா அறிவித்தார்.

கேரளாவில் கடந்த 28 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை மக்கள் உணரவும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், கேரளாவில் மருத்துவ அவசர நிலை பிறப்பிப்பது அவசியம் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.