விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு – பாஜக அமைச்சர் மகன் மீது தாக்குதல்

262

பாட்னா (24 ஜன 2022): பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பாஜக தலைவரும், மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமாரை, துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறி கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பீகார் மாநிலம் மொஃபுசில் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹரடியா கோரி தோலா கிராமத்தில், அமைச்சரின் மகனை கிராம மக்கள் சிலர் தாக்குவதையும், அவர் வைத்திருந்த துப்பாக்கியை அவர்கள் பறித்துச் சென்ற காட்சிகளும் நேற்று வெளியாகின.

ஒரு பழத்தோட்டத்தில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டிக்கொண்டு இருந்தனர். இதனை எதிர்த்து அமைச்சரின் குடும்பத்தினர் மோதலில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். சம்பவம் குறித்து அறிவதற்காக அங்கு சென்ற பப்லு குமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் நிலைமை கைமீறிப் போனதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிராம மக்கள் தாக்குதலால் காயமடைந்த அமைச்சரின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை என்று அமைச்சரின் மகன் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.