மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக உதவ முன் வந்த மசூதி நிர்வாகம்!

Share this News:

கொல்கத்தா (10 மே 2020): மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக பயன்படுத்திக் கொள்ள மசூதி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த மசூதி நிர்வாகம், கொல்கத்தா பெங்காலி பஜார் மசூதியின் மூன்றாவது தளத்தை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுக்கு அறிவித்துள்ளது. இது கொல்கத்தா மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மசூதி இமாம் மவுலானா முஸ்லிம் ரிஸ்வி கூறுகையில், “கொரோனா பரவலை எதிர்த்து அனைத்து மக்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். எங்கள் பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமிற்காக பல இடங்களை அரசு ஆய்வு செய்தது. அப்போதுதான் ஏன் மசூதியை வழங்கக்கூடாது என்று முடிவெடுத்தோம். அதன்படி எங்கள் அனுமதியை அரசுக்கு தெரியப் படுத்தியுள்ளோம்.

நிர்வாக ஆலோசனையின்படி, 6000 சதுர அடி உள்ள மசூதியின் மூன்றாவது தளத்தை தனிமைப்படுத்தல் முகாமாக உபயோகப் படுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளோம்.  இதற்கு மசூதி நிர்வாகக் குழுவினர் அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்” என்றார்.

தப்லீக் ஜமாத் பற்றியும், இந்திய முஸ்லிம்கள் பற்றியும் அச்சம் ஏற்படும்படி சிலர் கொரோனா ஜிஹாத் என்ற பெயரில் பொய்ச் செய்திகள் பரப்பி வரும் சூழலில் பதிலுக்கு ப்ளாஸ்மா தானம், மசூதியில் இடம் என முஸ்லிம்கள் அளித்து வரும் ஆதரவு, அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.


Share this News: