முடிந்தும் முடியாத நிர்பயா வழக்கு – மீண்டும் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

Share this News:

புதுடெல்லி (02 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகளுக்கு எதிராக திகார் சிறைச் சாலை, மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிர்பயா வன்புணர்வு படுகொலை வழக்கின் குற்றவாளிகளான அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், நால்வரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து கருணை மனு, மேல்முறையீட்டு மனு உள்ளிட்ட சட்டப்போராட்டங்களை குற்றவாளிகள் கையில் எடுத்து வருவதால் அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் நீடித்து வருகிறது.

இதனிடையே, நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரி நிர்பயாவின் பெற்றோர், டெல்லி அரசின் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதுடன், ஜனவரி 22ஆம் தேதி காலை 7மணிக்கு 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை பிப்ரவரி 1ஆம் தேதி நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த போது, தமக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்திருந்தார்.

அந்த கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதனை எதிர்த்து முகேஷ் குமார் செய்ய மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, டெல்லி விரைவு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டப்படி, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கிலிடும் சூழல் உருவானது. இந்த நேரத்தில் குற்றவாளிகளில் மற்றொருவரான பவன் குப்தா, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதனிடையே, “மறு உத்தரவு வரும் வரை 4 பேரையும் தூக்கிலிட கூடாது” என டெல்லி பட்டியாலா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து திகார் சிறைச் சாலை, மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்று நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது, பாலியல் குற்றவாளிகள் தெலுங்கானாவில் என்கவுன்டர் செய்யப்பட்டதை மக்கள் வரவேற்று கொண்டாடினர். நிர்பயா குற்றவாளிகளின் செயல்களால், மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.

அத்துடன், குற்றவாளிகள் நான்கு பேரையும் தனித்தனியாக தூக்கிலிட திகார் சிறைச்சாலை அனுமதி கோரியது. இதற்கு மத்திய அரசு சார்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Share this News:

Leave a Reply