இரயிலில் சத்தமாக பேச, பாட தடை!

217

புதுடெல்லி (23 ஜன 2022): இரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக சத்தமாக பாடுவதையும் பேசுவதையும் தடை செய்து மத்திய இரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் யாரேனும் இதுகுறித்து புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இரயில்வே தெரிவித்துள்ளது. இயர்போன் இல்லாமல் பாட்டு கேட்கக்கூடாது, கைப்பேசியில் சத்தமாக பேசக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரயில்வே அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததையடுத்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு சரிபார்ப்பவர்கள், RPF அதிகாரிகள் மற்றும் கோச் உதவியாளர்கள் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு பொறுப்பாவார்கள்.

குழுவாகப் பயணம் செய்பவர்கள் இரவில் வெகுநேரம் பேசக்கூடாது என்றும், இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை அணைத்துவிட வேண்டும் என்றும் இரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இச்சட்டம் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கும் மற்ற உயர் வகுப்புகளுக்கும் பொருந்தும். பொது வகுப்பிற்கு இது பொருந்தாது என இரயில்வே தெரிவித்துள்ளது.