மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசிய பாஜக எம்பிக்கு நோட்டீஸ்!

Share this News:

புதுடெல்லி (04 பிப் 2020): மஹாத்மா காந்தி பற்றி அவதுாறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிய, பா.ஜ., – எம்.பி., அனந்த குமார் ஹெக்டேவுக்கு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டம், சத்யாகிரகம் ஆகியன நாடகம். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்யாகிரக போராட்டத்தாலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்.,ஐ ஆதரிப்போர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. சத்யாகிரகத்தால் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டு செல்லவில்லை. விரக்தியாலேயே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்தனர்.

ஒட்டுமொத்த சுந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது. இவர்கள் சொல்வது போல், தலைவர்கள் யாரையும் போலீசார் தாக்கவில்லை. இவர்களின் சுதந்திர போராட்டமே ஒரு மிகப் பெரிய நாடகம்.” . என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் அவரது பேச்சுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், அனந்த குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.’அனந்த குமார் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, காங்., தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அனந்த குமார் ஹெக்டேவுக்கு, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, கர்நாடக மாநில, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply