தி காஷ்மீர் ஃபைல்ஸ் பொய்யான தகவல்களை பரப்பும் சினிமா : காஷ்மீர் முன்னாள் முதல்வர் கருத்து!

516

புதுடெல்லி (19 மார்ச் 2022): தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

1990ஆம் ஆண்டில் காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தி காஷ்மீர் பைல்ஸ். இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, இது ஆவணப்படமா அல்லது படமா என்பதை தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இது ஒரு ஆவணப்படம் என்றால், எதைக் காட்டினாலும் அது உண்மையாக இருக்க வேண்டும், ஆனால் தயாரிப்பாளர்கள் இது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்று கூறுகிறார்கள், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் பல பொய்யான விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன என உமர் அபதுல்லா கூறியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசியருக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை!

காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியபோது, ​​ஃபரூக் அப்துல்லா முதல்வராக இல்லை. ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தவர் ஜக்மோகன். வி.பி. சிங்கின் அரசாங்கம் மத்தியில் பாஜக ஆதரவுடன் இருந்தது எனக் கூறியுள்ள உமர் அப்துல்லா, படத்தில் விபி சிங்கின் அரசு மற்றும் பாஜகவை ஏன் காட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளதோடு, உண்மைகளுடன் விளையாடுவது சரியல்ல. காஷ்மீர் பண்டிட்டுகளின் கொலையை கண்டிக்கிறோம். ஆனால் காஷ்மீரி முஸ்லிம்களும் சீக்கியர்களும் உயிரை இழக்கவில்லையா எனவும் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.