கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் – ஆய்வு தகவல்!

புதுடெல்லி 02 ஜுலை 2021): இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது ட்விட்டரில் இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் என்பதாக அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகம் (சி.எம்.யூ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா கொரோனா இரண்டாவது அலை பாதிப்பிலும், கடுமையான ஆக்ஸிஜன் நெருக்கடியையும் எதிர்கொண்டிருந்த நேரத்தில் #IndiaNeedsOxygen மற்றும் #PakistanStandsWithIndia போன்ற ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தன.

இவற்றின் அடிப்படையில், ஏப்ரல் 21 முதல் மே 4 வரையிலான இதுபோன்ற 300,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களை ஆய்வு செய்த (சி.எம்.யூ) இதனை உறுதிப் படுத்தியுள்ளது.

அந்த பதிவுகளில் 55,712 ட்வீட்டுகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவை என்று கண்டறியப் பட்டுள்ளது. 46,651 ட்வீட்டுகள் இந்தியாவிலிருந்து வந்தவை, மீதமுள்ளவை உலகின் பிற பகுதிகளிலிருந்து வந்தவை.

ஆய்வின்படி, பாகிஸ்தானில் இருந்து வந்த பெரும்பாலான ட்வீட்டுகள் இந்தியாவுடன் ஒற்றுமையை விரும்புகின்றன என்பதையே காட்டுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கொரோனா இரண்டாவது அலையின்போது பாகிஸ்தான் அரசாங்கமும் பாகிஸ்தானின் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஆக்ஸிஜன் நெருக்கடியில் இருந்த இந்தியாவுக்கு உதவ முன்வந்தன.

முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான எடி பவுண்டேஷன் 50 ஆம்புலன்ஸ்களை அனுப்புவதாக உறுதியளித்தது.

ஆனால் இந்தியா அந்த உதவிகளை ஏற்கவில்லை.