ஹைதர் அலி சிஹாப் தங்கள் மறைவு – முஸ்லீம் லீக் இரங்கல்!

Share this News:

திருவனந்தபுரம் (06 மார்ச் 2022): இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கேரள மாநிலத் தலைவரும், நபிகள் நாயகத்தின் பரம்பரை வழிவந்தவருமான ஹைதர் அலி சிஹாப் தங்கள் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

இந்நிலையில் அவரது மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ளார்.

அந்த இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது;

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில தலைவரும் இயக்கத்தின் அரசியல், ஆன்மீக வழிகாட்டி நபிகள் நாயகம் அவர்களுடைய 37வது பரம்பரையில் உதித்தவருமாகிய செய்யது ஹைதர்அலி சிஹாப் தங்ஙள் 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12.40 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மருத்துவமனையில் மரணமுற்ற செய்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கும், இந்தியாவில் நல்லிணக்கம் பேணி, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வரும் வாழும் சமுதாய மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தங்களுடைய குடும்பம், தனது ஆன்மீக வழிகாட்டுதலில் மிகப் பெரும் அரசியல் சக்தியாக வளர்ப்பதற்கு தொடர்ந்து பாடுபட்டு வந்தது வரலாற்றில் பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டது. தங்ஙள் அவர்களுடைய மூத்த சகோதரர் செய்யது முஹம்மது அலி சிஹாப் தங்ஙள் அவர்களுடைய வழிகாட்டுதலில் இ.யூ. முஸ்லிம் லீக் கேரளாவில் ஆளுங்கட்சியாகவும், இந்திய அரசியலில் ஆளுங்கட்சி யாகவும் வளர்த்த பெருமை அவருக்கு உண்டு

அவர் காட்டிய வழியில் அவருக்குப் பிறகு கட்சியின் தலைமையேற்று புதிய வரலாறு படைத்து வந்தவர் செய்யது ஹைதர்அலி சிஹாப் தங்ஙள் ஆவார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களால் மிகுந்த பாராட்டும் நன்மதிப்பையும் பெற்று எல்லோருக்கும் ஆன்மீகக் குருவாகத் திகழ்ந்தவர். இன்று கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினுடைய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அனைத்துக் கட்சியினுடைய மரியாதையையும் நன்மதிப்பையும் பெற்று எல்லோருக்கும் நல்லவராக திகழ்ந்து வந்தார்.

அவரை அரசியல் ரீதியாகவும் வேறு எந்த வகையிலும் இதுவரை யாரும் குறை சொன்னது கிடையாது; விமர்சித்ததும் கிடையாது. எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுமென்பதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு எல்லா மக்களிடத்திலும் அன்பு, பாசம், மரியாதை, நன்மதிப்பு கொண்டு வாழ்ந்த பெரியர் செய்யது ஹைதர்அலி சிஹாப் தங்ஙள் அவர்கள். அவரது இழப்பு என்பது இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல்; இந்திய அரசியலுக்கே ஏற்பட்டிருக்கின்ற ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவர் வாழ்ந்த காலத்திலெல்லாம் அனைவருடைய நல்வாழ்விற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உதவிகள் செய்வதோடு அவர்களுக்காக வேண்டி இறைவனிடத்தில் பிரார்த்திப்பது தனது கடமை என வாழ்ந்து வந்தவர். அவருக்காக இன்று உலகில் வாழ்பவர்கள் எல்லோரும் பிரார்த்திக்கிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு உயர்ந்த அந்தஸ்தை சொர்க்கத்தில் வழங்க வேண்டுமென்று எல்லோரும் பிரார்த்திப்போமாக.

இவ்வாறு இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply