கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ 4 லட்சம் வழங்க ராகுல் காந்தி கோரிக்கை!

127

புதுடெல்லி (24 நவ 2021): கோவிட்டால் இறந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” கோவிட் காரணமாக இறந்தவர்கள் குறித்த நம்பகத்தகுந்த தகவல்களை அரசு வழங்க வேண்டும். அதேபோல், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை. மக்களின் வேதனையை அரசு குறைப்பதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குஜராத் மாடல் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர், கேவிட் காலத்தில் மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் நீங்கள் அங்கு இருக்கவில்லை. 10 முதல் 15 லட்ச ரூபாய் பணம் மற்றும் உறவினர்களை இழந்த போதும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. என்ன மாதிரியான அரசு உள்ளது. குஜராத்தில், கோவிட் காரணமாக 10 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக மாநில அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொரு வீடாக சென்று, இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பள்ளி மீது பஜ்ரங் தள் அமைப்பினர் வெறிச்செயல்!

இன்றைய குஜராத் மாடலில், கோவிட்டால் உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. புதிய விமானம் வாங்க பிரதமரிடம் ரூ.8,500 கோடி உள்ளது. ஆனால், உறவினர்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க பணம் இல்லை. கோவிட் காலகட்டத்தில், சில தொழிலதிபர்களிடம் நாடு ஒப்படைக்கப்படுகிறது. பல லட்சம் கோடி மதிப்பிற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

ஆனால், கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தும்.” என்று ராகுல் காந்தி அந்த வீடியோவில் ராகுல் கூறியுள்ளார்.