காங்கிரஸ் இந்துக்கள் கட்சி – ராகுல் காந்தி உரை!

Share this News:

ஜெய்ப்பூர் (13 டிச 2021): காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, இந்து மற்றும் இந்துத்துவா என்பதற்கு வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். இரண்டும் வெவ்வேறானவை எனக்கூறிய அவர், ‘ நான் ஒரு இந்து, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்துத்துவவாதிகள்’ என கடுமையாக விமர்சித்தார்.

உண்மையை நேசிப்பவர்கள் இந்துக்கள் எனக் கூறிய ராகுல்காந்தி, மகாத்மா காந்தி உண்மையைத் தேடியவர் எனத் தெரிவித்தார். ஆனால், நாதுராம் கோட்சே இந்துத்துவவாதி, அதனால் உண்மையைத் தேடிய மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றார் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாட்டில் இருக்கும் மதங்கள் அனைத்தையும் நேசிப்பவர்கள் தான் இந்துக்களாக இருக்க முடியும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் போலி இந்துக்கள். அவர்களிடம் இருக்கும் ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றியாக வேண்டும்.

இந்துகளின் ராஜ்ஜியம் இங்கு நடைபெறவில்லை, இந்துத்துவவாதிகளின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்களை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டும். மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக நாட்டை சீரழித்துவிட்டனர். பிரதமர் மோடி விவசாயிகளின் முதுகில் குத்தியவர். அவர் பெரும் தொழிலதிபர்களுக்காக மட்டுமே ஆட்சி நடத்துகிறார்.

நாட்டின் ஒட்டுமொத்த சொத்தில் 33 விழுக்காடு, ஒரு விழுக்காட்டினரிடம் இருக்கிறது. 10 விழுக்காட்டினரிடம் 66 விழுக்காடு பணம் இருக்கிறது. 50 விழுக்காடு மக்களிடம் வெறும் 6 % பணம் மட்டுமே இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக 2, 3 தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி நாட்டை தாரைவார்த்துவிட்டார்” என ஆவேசமாக பேசினார்.


Share this News:

Leave a Reply