தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்தியா – ராகுல் காந்தி பரபரப்பு தகவல்!

Share this News:

புதுடெல்லி (03 பிப் 2022): உலக நாடுகளிலிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில் அனைத்து பக்கமும் வெறுப்புகளால் நமது நாடு சூழப்பட்டிருக்கிறது. உலக நாடுகளால் தனித்து விடப்பட்டிருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆபத்தான நிலையில் உள்ளது நம் தேசம். இதை நான் விரும்பவில்லை. இது என்னை கவலையடைய செய்கிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பிரித்து வைப்பதுதான் இந்தியாவின் இலக்கு ஆகும். ஆனால் பாஜக அரசோ வெளியுறவுக் கொள்கை மூலம் இரண்டையும் ஒன்றிணைத்து வைத்துவிட்டது

நாம் என்ன மாதிரியான சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை குறைத்து மதிப்பிடாதீர்கள். இது உண்மையில் இந்தியாவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இந்த ஆண்டு குடியரசுத் தினத்திற்கு எந்த உலகத் தலைவர்களும் வரவில்லை. இதற்கு காரணம் நம் நாடு முற்றிலும் தனித்து விடப்பட்டுவிட்டது. நம்மை சுற்றி நேபாளம் , ஆப்கானிஸ்தான், சீனா உள்ளது. இது இந்திய மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட மிகப் பெரிய குற்றமாகும். கடந்த 1963 ஆம் ஆண்டு ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனாவுக்கு பாகிஸ்தான் சட்டவிரோதமாக கொடுத்துவிட்டது. 1970 களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக காரகோரம் தேசிய நெடுஞ்சாலையை சீனா கட்டியது. கடந்த 2013 ஆம் ஆண்டு சீனா- பாகிஸ்தான் இடையே பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஜம்மு காஷ்மீரில் சட்டவிதி 370 ஐ திரும்ப பெற்று மிகப் பெரிய பிழையை செய்துவிட்டீர்கள்.

இரு இந்தியக்கள் உள்ளன. ஒன்று செல்வச் செழிப்புடன் இருக்கும் பணக்காரர்களுக்கானது. இவர்களுக்கு வேலைவாய்ப்போ, தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ தேவையில்லை. இன்னொன்று ஏழைகளுக்கானது. 40 கோடி இந்தியர்களின் மொத்த சொத்துகளை 10 பெரும்பணக்காரர்கள் வைத்துள்ளார்கள். இது எப்படி நிகழ்ந்தது? நரேந்திர மோடிதான் இதை செய்தார்.

மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா குறித்தெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால் 2021 இல் 3 கோடி இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர். சிறு குறு தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகிறது. ஆனால் கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு அதை பணக்காரர்களுக்கு கொடுக்கிறீர்கள். கொரோனா பரவலால் 84 சதவீதம் பேர் தங்கள் ஊதியத்தை இழந்துவிட்டனர். அவர்கள் வறுமையை நோக்கி பயணிக்கிறார்கள். 10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த 27 கோடி மக்களை மீட்டெடுத்தது. இதை நாங்கள் சொல்லவில்லை. இதை உண்மையான புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆனால் பாஜக அரசோ 23 கோடி பேரை வறுமையில் தள்ளிவிட்டது.

மாநிலங்கள் சேர்ந்ததுதான் இந்தியா. இங்கு மன்னராட்சி போல் யாரும் ஆள முடியாது. வெவ்வேறு மொழிகள், கலாச்சாரங்களை ஒடுக்க முடியாது. 1947 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் வந்துவிட்டது. நீங்கள் ஒரு காலும் தமிழகத்தை ஆள முடியாது. நீதித் துறை, தேர்தல் ஆணையம், பெகாசஸ் ஆகியவை மாநிலங்களின் குரல்களை நெரிக்கும் கருவிகளாகிவிட்டன.

இந்திய அரசியல்வாதியை பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்டால், அது தமிழக மக்களின் மீதான தாக்குதல், அஸ்ஸாம் மக்களின் மீதான தாக்குதல், கேரளா மக்களின் மீதான தாக்குதல், வங்கத்து மக்கள் மீதான தாக்குதல். சீனா என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் டோக்லாமை பிடிப்பதுதான். இது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.

கூட்டாட்சியின்படிதான் இந்தியாவை ஆள வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்கிய போதுதான் எனது கொள்ளு தாத்தா 15 ஆண்டுகள் சிறை சென்றார். எனது பாட்டி 32 முறை சுடப்பட்டார். எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார். இந்தியா என்றால் என்ன என்பதை நான் புரிந்து வைத்துள்ளேன். நீங்கள் ஆபத்துடன் விளையாடி கொண்டிருக்கிறீர்கள். அதை நிறுத்துமாறு நான் அறிவுறுத்துகிறேன். ஆனால் நீங்கள் நிறுத்தாவிட்டால் நிச்சயம் பிரச்சினை எழும். ஏற்கெனவே தமிழகம், வடகிழக்கு மாநிலங்களில் பிரச்சினை உருவாகிவிட்டது.

பாஜக அரசாங்கத்தில் பெரிய பெரிய தொழிலதிபர்கள் லாபம் அடைகிறார்கள். விமான நிலையம், டவர்கள், சுரங்கம், சிலிண்டர் விநியோகம், எண்ணெய் வித்துகள் என அனைத்திலும் அதானி இருக்கிறார். ஒட்டுமொத்த இந்தியாவின் வளமும் ஒரு சிலரிடம் போய் கொண்டிருக்கிறது.

பாஜக அரசாங்கத்தில் பெரிய பெரிய தொழிலதிபர்கள் லாபம் அடைகிறார்கள். விமான நிலையம், டவர்கள், சுரங்கம், சிலிண்டர் விநியோகம், எண்ணெய் வித்துகள் என அனைத்திலும் அதானி இருக்கிறார். ஒட்டுமொத்த இந்தியாவின் வளமும் ஒரு சிலரிடம் போய் கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், லட்சத்தீவுகளைச்சேர்ந்த சகோதரர்களை போலவே தமிழகத்தை சேர்ந்த சகோதரர்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம், வரலாறு, கலாச்சாரம் உள்ளது. அதனை மதிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நாட்டின் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்து கொள்ள நினைக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் மட்டுமே இந்தியாவை நடத்த முடியும். பாஜக மாநிலங்களின் குரலை ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


Share this News:

Leave a Reply