டெல்லி ஜஹாங்கிர்புரி முஸ்லீம்களின் கட்டிடங்களை இடிக்க மறு உத்தரவு வரும்வரை உச்ச நீதிமன்றம் தடை!

Share this News:

புதுடெல்லி (21 ஏப் 2022): வடக்கு டெல்லி ஜஹாங்கிர்புரியில் முனிசிபல் கார்ப்பரேஷன் (என்.டி.எம்.சி) மேற்கொண்ட இடிப்பு நடவடிக்கை தொடர்பான தற்போதைய உத்தரவை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜஹாங்கிர்புரியில் நடத்தப்பட்ட இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் மற்றும் பலர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர். காவாய் ஆகியோர் இந்த இடிப்பு குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் இடிப்பு நடவடிக்கைக்கான தடை தொடரும் என தெரிவித்த நீதிபதிகள் இதுகுறித்து 2 வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் நாட்டின் பிற பகுதிகளான குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கட்டிடங்கள் இடிப்பதற்கு எதிராகவும் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்தியா முழுவதும் அத்துமீறல்கள் நடந்து வருகின்றன.முஸ்லீம் சமூகத்தை ஆக்கிரமிப்புடன் தொடர்புபடுத்துவது சரியல்ல.

பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடப்பதாகவும், ஊர்வலங்கள் நடத்தப்பட்டு,மோதல்கள் ஏற்படும் போது, ​​ஒரே ஒரு சமூகத்தினரின் வீடுகள் மட்டும் புல்டோசர்களால் அடித்து நொறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மறு உத்தரவு வரும் வரை நீதிமன்றம் இடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ​​நாடு முழுவதும் இடிப்பதை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளது.


Share this News:

Leave a Reply