குஜராத் மாடலை டெல்லியில் நிகழ்த்திப் பார்க்க துடிக்கும் அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

Share this News:

சென்னை (25 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் இந்த கலவரத்துக்கும் சாவுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்

குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட போதே இது மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துகிறது கலவரத்தைத் தூண்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் கருத்து தெரிவித்தன. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. டெல்லியிலும் இந்த சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இந்நிலையில் இந்த சட்டத்தை வைத்து பெரும்பான்மை மதவாதத்தைத் தூண்டி டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று திட்டம் போட்ட பாஜகவின் கணக்கு பலிக்கவில்லை. தேர்தலின்போது பல்வேறு விதமான வன்முறைகளை பாஜகவினர் தூண்டி விட்டனர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க்கும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுடுங்கள் என்று ஒரு அமைச்சர் பேசினார். அதன் பிறகு அத்தகைய துப்பாக்கிச்சூடுகளும் நடைபெற்றன. எவ்வளவு வன்முறையைத் தூண்டினாலும் மத வெறி சக்திகளுக்கு நாங்கள் பலியாக மாட்டோம் என்று டெல்லி வாக்காளர்கள் பாஜகவை நிராகரித்து ஆம் ஆத்மி கட்சிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.

இந்தத் தோல்வியினால் கோபமடைந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாஜகவினரும் அங்கு திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருகின்றார். பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்பவர் பேசிய வெறுப்பு பேச்சுகள் தான் கலவரம் வெடிக்கக் காரணம் எனத் தெரிகிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக எம்பி கௌதம் காம்பீரே வலியுறுத்தியிருப்பதன் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த ஞாயிறு அன்று ஆரம்பித்த கலவரம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வடகிழக்கு டெல்லி பகுதியில் நேற்று ஏவப்பட்ட மிகப்பெரிய கலவரத்தில் ஏராளமான கடைகளும் வீடுகளும் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. போலீஸ்காரர்களே கல்வீச்சில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.இதுவரை இந்த கலவரத்தில் போலீஸ்காரர் ஒருவரும் 6 பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

’ குஜராத் மாடலை’ டெல்லியில் நிகழ்த்திப் பார்க்க அமித் ஷா திட்டமிட்டிருப்பது அப்பட்டமாக இதன்மூலம் தெரியவந்துள்ளது. இந்த கலவரத்துக்கும் உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். காவல்துறை அதிகாரத்தை உள்துறை அமைச்சகத்திடமிருந்து மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்துவதன் மூலமே அரசியல் லாபம் ஈட்டலாம் என பாஜக திட்டமிட்டு இத்தகைய வன்முறைகளைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அதன் மதவாத சதித் திட்டத்துக்கும் ஆத்திரமூட்டலுக்கும் எவரும் பலியாகாமல் அமைதி காக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply