சொந்த நிலத்தை விற்று ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் சகோதரர்கள்!

811

பெங்களூரு (25 ஏப் 2020): லாக்டவுனால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தங்களது சொந்த நிலத்தை விற்று மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர் முஜம்மில் மற்றும் தஜம்முல் முஹம்மது சகோதரர்கள்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரும், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள், அனாதையாக கூலி வேலை பார்த்து இன்று வரை ஒன்றாகவே இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இருவரும் நிலம் பேசி விற்கும் ஏஜெண்ட்களாக பணிபுரிந்து வருகின்றனர். எனினும் சொந்தமாக அவர்களுக்கு வீடு இல்லை. இதற்காக இருவரும் சேர்த்த பணத்தில் ஒரு நிலத்தை வாங்கினர். எதிர் காலத்தில் அதில் ஒரு வீடுகட்ட வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் லாக்டவுனால் பல மக்கள் அவதியுற்று வருவது அனைவரும் அறிந்ததே. இதேபோலத்தான், தஜம்முல், முஜம்மில் சகோதரர்கள் வாழும் பகுதியிலும் ஏழை எளிய மக்கள் உணவுக்காக அவதியுறுவதை இவர்கள் உணர்ந்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் - பாஜக எம்பி குற்றச்சாட்டு!

உடனே அவர்கள் வைத்திருந்த நிலத்தை ரூ 25 லட்சத்திற்கு விற்று அப்பகுதி ஏழை மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “உணவுக்கு படும் கஷ்டங்களை நாங்கள் சிறு வயது முதலே உணர்ந்தவர்கள். இம்மக்களும் அதேபோல்தான் கஷ்டப்படுகிறார்கள். சிலர் கேட்க வெட்கப்படுகிறார்கள், இவற்றையெல்லாம் உணர்ந்தே அனைவருக்கும் உதவுகிறோம். பசிக்கு மதம் கிடையாது எல்லோருக்கும் ஒரே விதமான பசிதான். அதனால்தான் நாங்கள் இனம், மதம் பார்த்து உதவவில்லை. ஏழைகள் என்றால் உடனே உதவிக்கு வருவோம்” என்றனர்.

இவர்களின் சேவைக்கு 20 இளைஞர்கள் உதவிக்கரமாக உள்ளனர்.