மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர் அவசியமில்லை: மத்திய அரசு!

Share this News:

புதுடெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது..

நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிக்கும் பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று விவாதித்தது.

இக்கூட்டத்தை உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தொடக்கி வைத்தார். இதில், மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா, பல மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான விண்ணப்ப படிவத்தில் பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த ஊர் குறித்தும், ஆதார், பான் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண் குறித்தும் புதிதாக கேட்கப்பட்டுள்ள 2 கேள்விகளுக்கு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலா் டி.பி.குப்தா பேசுகையில், ‘‘நம் நாட்டில் பலரும் தங்கள் பிறந்த ஊர் குறித்த தகவலே சரியாக தெரியாத நிலையில் உள்ளனர். அப்படியிருக்கையில், அவர்களின் பெற்றோரின் பிறந்த ஊா் குறித்த கேள்விகள் புதிய விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளை கேட்பதற்கான நோக்கம் என்னவென்று விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, இந்தக் கேள்விகளை நீக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சக அதிகாரிகள், ‘‘என்பிஆர் படிவத்தில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பொதுமக்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாயமில்லை. பெற்றோர் பிறந்த இடம், ஆதார், பான் எண் போன்ற தகவல்களை அவர்கள் விரும்பினால் மட்டுமே தரலாம். மற்றபடி யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்’’ என பதிலளித்தனர்.

கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, “மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆருக்காக எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியதில்லை. மக்கள் அவர்கள் விரும்பும் தகவலை அளித்தால்போதும். யாரும் அழுத்தம் தர மாட்டார்கள். என்பிஆர் தகவல்கள் ஒருபோதும் என்ஆர்சியுடன் இணைக்கப்படாது” என்றார். அதே சமயம், என்பிஆரில் தவறான தகவல் அளித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் பிறந்த இடம், ஆதார் குறித்த தகவல்கள் என்பிஆர் பதிவில் கட்டாயமில்லை என மத்திய அரசு கூறினாலும், இத்தகவல்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், இவை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கட்டாயமாக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) பின்வாசல் வழியாக கொண்டு வரும் முயற்சியே தேசிய மக்கள் தொகை பதிவேடு என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply