கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – ஒன்றிய அரசு பதில்!

Share this News:

புதுடெல்லி (17 ஜன 2022): யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்லை என்று ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ‘ மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடத்தில் காண்பிக்கும் கட்டாயத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில், ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக தடுப்பூசியை செலுத்துமாறு இந்திய அரசோ, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ நிர்பந்தம் செய்யவில்லை. கோவிட் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் நலன் கருதியே தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பொது மக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. அச்சு, மின்னணு ஊடகம், சமூக வலைதளம் என அனைத்திலும் தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது. அதை செயல்படுத்த சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், யாருடைய விருப்பத்திற்கு மாறாக தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செலுத்த முடியாது. அதேபோல், தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்து செல்லும்படி எவ்வித உத்தரவையும் ஒன்றிய அரசு பிறப்பிக்கவில்லை. இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply