“தூக்கப்பட்டானா துபே..?”-உ.பி. காவல்துறையின் என்கவுன்டர் ஏடாகூடங்கள்!

Share this News:

லக்னோ (10 ஜூலை 2020): கடந்த வாரம் கான்பூரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டை ஒன்றில், உ.பி. காவலர்கள் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வாரம் கழித்து, அந்த சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியும், உ.பி.-இன் முக்கிய குண்டா-வுமான விகாஸ் துபே இன்று என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

கான்பூர் சம்பவத்துக்குப் பின்னர், ஆறு நாட்கள் கழித்து அச்சம்பவ தொடர்புடைய இந்த குற்றவாளி, மத்தியப் பிரதேச உஜ்ஜய்னி-இல் நேற்று கைது செய்யப்பட்டான். அவனை அங்கிருந்து கான்பூருக்கு, உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படை வாகனத்தில் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது வழியில் சிறப்புப் படையின் வாகனம் ஒன்று கவிழ்ந்தது.அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரவுடி துபே தப்பிக்க முயன்றபோது என்கவுன்டர் செய்யப்பட்டதாக காவல் படை தற்போது அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில், நான்கு காவலர்கள் படுகாயமுற்றனர்.

துபே-வின் என்கவுன்டர் சம்பவத்தால், கான்பூரின் பிகாரு ஜில்லா-வில் மக்கள் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

எனினும், துபே-இன் இந்த என்கவுன்டர், வெறும் காவலர் உயிரிழப்புக்கு பழி வாங்கலா அல்லது அவன் மூலமாக வெளிவர இருந்த பல்வேறு உண்மைகள் மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்புகளை புதைத்துவிடக்கூடிய திட்டமா என்று நியாயவான்கள் கேள்வி எழுப்புகின்றனர். நியாமான நீதிக்கான சில வடஇந்திய ஊடகங்களும் இந்த சந்தேகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஐந்து முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன.
.
1. துபே-வை ஏற்றி வந்த வாகனத்தைத் பின்தொடர்ந்து வந்த ஊடக செய்தியாளர்களின் வாகனம் என்கவுண்டருக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..?

2. காலை நான்கு மணிக்கு வழியில் இருந்த ஒரு சுங்கச்சாவடியை மூன்று சிறப்புக் காவல்படை வாகனங்கள் கடந்து செல்லும்போது அவற்றில் எதுவொன்றிலும் துபே இருக்கவில்லை. துபே இருந்த கார் எங்கு போனது..? மேலும் கவிழ்ந்து போனதாகக் கூறப்படும் வாகனத்திலும் துபே பிரயாணிக்கவில்லை. அவ்வாறெனில். அப்போது துபே எங்கே..?

3. கடந்த 3-ஆம் தேதி காவலர்கள் சுட்டுக்கொலை. பின்னர் துபே உஜ்ஜய்னி-க்கு தப்பி ஓட்டம். 10-ஆம் தேதி உ.பி. சிறப்புக் காவல் படை வருகை. வழியில் விபத்து. கால் எலும்பு உடைந்த துபே தப்பி ஓட முயற்சி.என்கவுன்டரில் சுட்டுக்கொலை. இப்படிப்பட்ட ரவுடி ஒருவனை அழைத்து வரும்போது பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை மெத்தனம் காட்டியது என்..? அதுவும் கடந்த ஆணடுகளில் அவன் மீது 60-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருந்தும்,அரசியல் புள்ளிகளின் ஆதரவோடு தப்பி வந்த ஒரு குற்றவாளியின் பாதுகாப்பில் இத்துணை அலட்சியமா..? யாரைக் காப்பாற்ற இந்த அலட்சியம்..?

4. இந்த ரவுடி துபே-வின் முக்கிய கூட்டாளியான பிரபாத் மிஷ்ரா நேற்றுதான் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது என்கவுன்டர் செய்யப்பட்டதாக, கான்பூர் ஏ.டி.ஜி. செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவையிரண்டு சம்பவங்களும் ஏதேச்சையானதா..? ஜோடிக்கப்பட்டதா? ஏதேச்சையானது எனில், ஒரு நாள் முன்புதான் ஒரு கிரிமினலின் மற்றொரு கூட்டாளி என்கவுன்டர் செய்யப்பட்டிருக்க உ.பி. காவல்துறை, முக்கிய கிரிமினல் துபே விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல் இருந்தது ஏன்..?

5. இறுதியாக, உ.பி. காவல்துறை இந்த என்கவுன்டர் மூலம். குற்றவாளிக்கு சாவுமணி அடித்ததா? அல்லது ஒட்டுமொத்த குற்றச் சங்கிலித் தொடர்களுக்கும் சாவு மணி அடித்ததா..? விகாஸ் துபே ஒரே இரவில் தாதா ஆகிவிடவில்லை. காவல் துறை மற்றும் அரசியலில் இருக்கும் கருப்பு ஆடுகள் சிலரின் ஒத்துழைப்போடு இந்த ரவுடி இராஜ்யத்தை நடத்தி வந்திருக்கின்றான் என்பது உ.பி. முழுவதும் அறிந்த உண்மை. இவனது என்கவுன்டர் மூலம், உ.பி. அரசு இந்த குற்றப் பின்னணி-யின் அதளபாதாளம் வரை செல்லும் பாதையை அடைத்துவிட்டதா..? அல்லது அரசியல் மற்றும் காவல் துறைப் புள்ளிகள் சிலரைக் காப்பாற்ற துபே-வை துச்சமாக எண்ணி, ‘தூக்கி’விட்டதா..?

இந்த மில்லியன் டாலர் கேள்வியை, உ.பி.-இன் யோகி இராஜ்யத்துக்கு முன்பாக நீதிவான்கள் முன்வைக்கின்றனர்.


Share this News: