கொரோனா நிதியுதவியாக ரூ.1,125 கோடி வழங்கும் விப்ரோ, அசிம் பிரேம்ஜி!

Share this News:

புதுடெல்லி (02 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணிகளுக்காக விப்ரோ நிறுவனம் சார்பிலும் மற்றும் அதன் நிறுவனர் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையும் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,125 கோடி வழங்கியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவிலும்  இந்தியாவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களுக்குத் தீவிரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா நிதியாக தொழில் துறையினர் தரப்பிலிருந்தும் அரசு அமைப்புகள் தரப்பிலிருந்தும் கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக அதிக நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமரும் பொதுமக்களிடம் நிதியுதவி அளிக்க வேண்டி கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தன் பங்குக்கு ரூ.1,125 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில், விப்ரோ ரூ.100 கோடியும், விப்ரோ எண்டர்பிரைசஸ் ரூ.25 கோடிட்யும், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடியும் வழங்குகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கவும், கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்கவும், மருத்துவ உபகரணங்களுக்கும் இந்த நிதி அரசின் வழிகாட்டுதலின் பேரில் பயன்படுத்தப்படும் என்று விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசிம் பிரேம்ஜியின் அறக்கட்டளையைச் சேர்ந்த 1,600 பேர் அடங்கிய குழு, கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply