
பதினெண்கீழ்க்கணக்கு நூற்கள் போன்று பதினெண்மேற்கணக்கு நூற்கள் பிரபலமடையவில்லையே? - தேவிப்ரியா, பெங்களூரு.
நீங்கள் தமிழார்வலர் எனக் கருதுகிறேன்.
ஐந்தடிகளுக்கு மிகாமல் பாடப்பட்ட செய்யுட்களைக் கொண்டவை கீழ்க்கணக்கு என்றும் அதற்கும் மேற்பட்டவை மேற்கணக்கு என்றும் பகுக்கப்பட்டன.
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புற நானூறு ஆகியன எட்டுத்தொகை நூற்கள். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம் ஆகியன பத்துப் பாட்டு நூற்கள். இந்த எட்டும் பத்தும் பதினெண் மேற்கணக்கு நூற்களாகும்.
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை ஆகிய பதினெட்டும் கீழ்க்கணக்கு நூற்கள்.
கீழ்க்கணக்கு நூற்கள் பலவும் நீதி நூற்கள். எனவே அவற்றைப் பள்ளிகளில் சிறு வகுப்பிலிருந்தே பாடமாகவும் மனப்பாடப் பகுதியாகவும் வைத்திருப்பதால் அவை மட்டுமே பரவலாக மக்களால் அறியப்பட்டிருக்கின்றன. மேலும் அன்றாட வாழ்வில் உரையாடலின்போது மேற்கோளாகவும் அறிவுரையாகவும் நீதி வெண்பாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கணக்கு நூற்கள் பட்ட வகுப்புகளிலும் தமிழ் இலக்கியப் பட்ட மேல் வகுப்புகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் அவை பிரபலமாக வில்லை.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்கிறாரே விஜயகாந்த்? - ஜாண்சன், மயிலாப்பூர்.
மாறித்தான் இருக்கிறது கேப்டன்!
மின்வெட்டு நேரம் கூடி இருக்கிறது. பால் விலை பேருந்துக் கட்டணம் ஏறி இருக்கின்றன. அமைச்சரவை அடிக்கடி மாற்றப்படுகிறது. நீதிமன்றங்களால் அரசு குட்டப்படுகிறது.
பெரிய காட்சி மாற்றம் "நிழல் அதிகார மையம்" அகற்றப்பட்டிருப்பது.
மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு எதிராகவும், மதவெறியையும், சாதி வெறியையும் தூண்டி விடுவதையே குறிக்கோளாகவும் கொண்டுள்ளதே சில பத்திரிக்கைகள்? - பத்மகுமார், நாகை.
சில என்பதை விட ஒன்று என்பதே உண்மை.
தனக்குப் பிடித்த மதத்தையும் சாதியையும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் தவிர பிற அனைவரையும் அனைத்தையும் தரங்கெட்டு விமர்சிப்பதே பிழைப்பாககொண்ட அப்பத்திரிகை பலமுறை கேவலப்பட்டும் திருந்தும் வழியைக்காணோம். மக்கள் அப்பத்திரிகையைப் புறக்கணிக்க வேண்டும்.
மனது என்பது இதயமா மூளையா? - செல்வி, துபாய்.
மனம் என்பது கண்ணால் காண இயலாத ஆனால் உணர முடிந்த ஒன்று. வடமொழியில் மனஸ்.. தமிழில் நெஞ்சு என்று சொல்வோம். சிறு வயதில் பள்ளிப் பாடங்களை நினைவிலிருத்திக் கொள்ள ஒரு கையால் நெஞ்சில் அடித்துக் கொண்டே படித்த "பிள்ளைப்பருவ" நினைவு பலருக்கும் இருக்கலாம்.
நினைவாற்றல் சிந்திக்கும் திறன் போன்றவை மூளையின் செயல்கள் என்று இப்போது புரிந்திருக்கிறோம். இதயம் ஒரு பம்பிங் ஸ்டேஷன் தான். ஆனால் உலக மொழிகளில் இதயத்தை இணைத்தே மனம் என்று வழங்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தால் சசிகலா அதிமுகவுக்கு திரும்ப வரும் வாய்ப்புள்ளதா? - சந்திரகுமார், திருச்செந்தூர்.
வழக்கு விசாரணையில் இருக்கும்போதே தண்டனை கிடைத்தால்.. என்ற ஊகம் வேண்டாம்.
ஜெயலலிதாமீது தொடரப்பட்ட பல வழக்குகளில் இருந்தும் அவர் விடுதலை ஆகியிருக்கிறாரே..
சசிகலா அதிமுகவுக்கு அல்லது போயஸ் தோட்டத்துக்குத் திரும்ப வரும் வாய்ப்பு அறவே இல்லை என்று சொல்ல முடியாத அளவு ஜெயலலிதாவின் பழைய நடவடிக்கைகள் சான்று பகர்கின்றன.
மோடி, அத்வானி, ஜெயலலிதா, சுப்ரமணிய சாமி - பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் யார்? - அம்புஜம், திருமயிலை.
மோடி.
அத்வானிக்குத் தகுதி இல்லையென பீ ஜே பி நினைப்பதால் அவருக்கு அவரது கட்சியிலேயே ஆதரவில்லை.
ஜெயலலிதா எடுத்தேன் கவிழ்த்தேன்.. என அவசர முடிவெடுத்து நீதிமன்றங்களால் குட்டு வாங்குவார். ஒரு மாநில அமைச்சரைவையைக் கூட ஒழுங்காக அமைக்காமல் தடுமாறுகிறார்.
சு சாமி ஒற்றையாள்.. குழப்பவாதி எனப் பெயரெடுத்தவர். பிரதமர் பதவிக்கு அவரை ஆதரிக்கவும் ஆள் இல்லை.
மோடி, குஜராத்தில் நடந்த நர வேட்டைக்குப் பின் தம் முகத்தைக் காப்பாற்ற முயன்று அம்மாநிலத்தை முன்னணிக்குக் கொண்டு வரப்பாடுபடும் சிறந்த நிர்வாகி. அவருக்கு பீ ஜே பி தவிர பிற கட்சியினரின் --குறிப்பாக அ இ அ தி மு க-- ஆதரவும் கிடைக்கும்.
கொலவெறி பாடல்மூலம் செம்மொழியாம் தமிழ் மொழியின் புகழைப் பரப்பிய தனுசுக்குப் பாரத ரத்னா விருது கிடைக்குமா? - தனபால், வல்லக்கோட்டை.
"பாரத ரத்னா" விருது மேல் உங்களுக்கு ஏன் இந்தக் "கொலவெறி"?
சிங்கம் ஏன் புல் சாப்பிடுவதில்லை? - மதுரை கணபதி.
சிங்கம் மட்டுமின்றி, வேட்டையாடிப் பிடித்துண்ணும் எல்லா விலங்குகளும் புல் உண்பதில்லையே..!
யானை விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை என்பதுபோல் சிங்கத்தின் இயற்கை அமைப்பு அது.
பறவைக் காச்சல், மாட்டுக் காய்ச்சல் (அந்தாரக்ஸ்), பன்றிக் காய்ச்சல் போன்றவை பற்றிய பேச்சே இல்லையே! அவையெல்லாம் உண்மையான நோய்களா? உண்டாக்கப்பட்டவையா? - ப.கோ. வசீகரன்.
உண்மையானவைதாம். அதனால் பல உயிர்களும் பறிக்கப்பட்டுள்ளன.
முன்னர் அளிக்கப்பட்ட விடைகளையும் காண்க.
ஐயா! இந்த பன்றிக் காய்ச்சல் எங்கே போனது...? - அப்பாஸ், நிரவி.
மருந்துக் கம்பெனிகளும் ஊடகங்களும் விரும்பும்போது மீண்டும் வரும்.
ஹெச் 1 என் 1 வைரஸால் பன்றிக் காய்ச்சல் வருகிறது. பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என அவ்வப்போது பல வந்துபோய்க் கொண்டேதான் இருக்கின்றன.;ஊடகங்கள் பரபரப்பாக்கி விடுகின்றன.
ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல் பரபரப்பு; டெல்லி விளயாட்டுப் போட்டி ஊழல் வந்ததும் ஆதர்ஷ் பின்னுக்குப் போய்விட்டது; ஸ்பெக்ட்ரம் வந்ததும் அதுவே பரபரப்பானது. ஊடகங்களுக்குப் பரபரப்புத் தேவை.
பன்றிக்காய்ச்சல் பரபரப்புகள் அடங்கி விட்டதுபோல் தெரிகிறதே? - பன்னீர் செல்வம்
பறவைக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்
பரபரப்பைக் கிளப்புவதும் அதை அடக்குவதும் ஊடகங்களே!
ஊடகங்களுக்கு வேறு பரபரப்புச் செய்திகள் கிடைத்ததால் பன்றிக்காய்ச்சல் பரபரப்பு அடங்கி விட்டது.
தமிழ் பற்றுள்ள அரசு, மதுபானக் கடைகளில் குவார்ட்டர், ஃபுல், என்பதற்குப் பதிலாக கால், முழுசு என்றுதான் சொல்லவேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டால் என்ன? - முத்து, சென்னை.
இன்றைய தமிழக அரசு தமிழ்ப்பற்றுள்ள அரசு என நீங்களாகவே நினைத்துக்கொண்டால் எப்படி?
quarter, full போன்றவற்றைக் கால், முழு என்று சொல்லிவிட்டு bottle ஐ எப்படிச் சொல்வதாம்?
பீர், ப்ராண்டி, விஸ்கி, ரம், ஜின் என என்னென்னவோ பெயர்களில் வரும் மதுவகைகளின் பெயர்களையும் தமிழில் சொல்ல வேண்டாமோ?
நீங்கள் ஒரு அரசு மதுக்கடையில் போய்ச் செந்தமிழில் பேசிப் பாருங்களேன்.:--))
சாத்தானின் வேதம் எழுதிய ருஷ்டி வேறு ஏதாவது எழுதி இருக்கிறாரா? - இளமாறன், நாகை.
சாத்தானின் வசனத்தை எழுதிய ருஷ்டி அதற்கும் முன்னர் Grimus Midnight's Children, Shame போன்ற பிரபலமான நாவல்களை எழுதியுள்ளார். the satanic verses நான்காவது நாவல். மேலும் பல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
Midnight's Children, நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்த போது அவர் பெற்ற பெயரை விட the satanic verses நாவலால் அதிகமாகவே பிரபலமடைந்து விட்டார். அந்த நூலின் காரணமாகக் கடந்த ஒரு வாரமாக ருஷ்டிதான் ஊடகங்களில் நிறைந்துள்ளார்.
இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பர்களின் நடவடிக்கை யதார்த்தமாக இல்லை, அவர்கள் நடிக்கிறார்கள் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - முகமது ஹசன், சேலம்.
பொதுவாகவே தொலைக்காட்சிகளில் வரும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒத்திகை பார்த்து நடத்தப் படுபவையே. பார்வையாளராகிய உங்களுக்கே "யதார்த்தம் இல்லை; நடிக்கிறார்கள்" என்று புலப்படும் அளவு அந்நிகழ்ச்சி தயாரிக்கப்படுவதிலிருந்து அதன் தரத்தை உணரலாம்.
(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
| வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
Dear Brother,Please read the answer again....
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed