சில நாட்களாகவே திமுவின் கூடாரங்களில் நிலவும் சூழல் சரியில்லை என்றே எண்ணத் தோன்றும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவருகின்றன. திமுகவில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று தமது துணைப் பொதுச் செயலாளர் பதவியைத் தூக்கி எறிந்த பரிதி இளம்வழுதி தமது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தார்.
ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப் பட்ட நேரத்தில் 1991 -ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் அனுதாப அலையில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் திமுக தலைவர் கருணாநிதியும், பரிதி இளம்வழுதி மட்டுமே. பரிதி, எழும்பூர் தொகுதியில் யசோதாவை 1203 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற கருணாநிதி தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சட்டப்பேரவையில் திமுக சார்பாக தனியாளாக நின்றவர் பரிதி இளம்வழுதி.
அப்படிப் பட்ட பரிதி இளம்வழுதி கட்சிப் பதவியை ராஜினாமா செய்தது கட்சிக்குள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்த வில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு பரிதி இளம்வழுதியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப் பட்டு காலியாக உள்ள துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி நியமிக்கப் பட்டதாகவும் அறிவிப்பு வெளியானது.
தம்மை கட்சி எப்படியும் சமாதானம் செய்யும் என்று எதிர்பார்த்து இருந்த பரிதி இளம்வழுதிக்கு அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப் பட்டது சற்றே அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கக் கூடும். மறுநாள் தமது அறிக்கையில், "கருணாநிதியின் கட்டுப் பாட்டில் திமுக இல்லை என்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின் கருணாநிதியை விஞ்சிய சக்தியாக செயல்படுகிறார்" என்றும் தெரிவித்தார். மேலும் கட்சியில் இது போன்ற நிலையில் பலரும் உள்ளதாகத் தெரிவித்த பரிதி இளம்வழுதி, அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அதையும் செய்வேன் என்றும் அவர்களுக்குத் தலைமை ஏற்பேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
பரிதி இளம்வழுதியின் இந்த அறிக்கை திமுக தலைமையையும் ஸ்டாலினையும் அதிகமாகவே கோபப்பட வைத்து இருக்கும். அதன் விளைவே, முரசொலி பத்திரிக்கையில் கருணாநிதி தம் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம். அதில்,
"1976ஆம் ஆண்டு 'நெருக்கடி நிலை' அறிவிக்கப்பட்டு நடைபெற்ற கொடுமைகளைக் கண்டவர்கள்தானே நாம்! தலைவர்கள் எல்லாம் சிறையிலே! அங்கேயும் வன்முறைகள்! என்னைப் பார்த்தாலே சிறை! எனக்குக் காரோட்டினால் சிறை! ஏன், எனக்கு சாப்பாடு போட்டாலே சிறை! என்றெல்லாம் நடைபெற்று, கழகமே அவ்வளவுதான், இனி எழுந்திருக்கவே முடியாது, என்று இதயக் கோட்டை எழுப்பியோர் எத்தனை பேர்? அவர்களின் கனவுகளையெல்லாம் இடித்து நொறுக்கி, உடன்பிறப்பே! நீயல்லவா நிமிர்ந்து நின்று சுடர் முகம் தூக்கி கோடிக் கதிரவன்கள் கூடி வந்ததுபோல ஒளி பரப்பி, எட்டுத் திசையும் முரசு கொட்டி முழக்கமிட்டாய்!
எரிச்சல் கணை - ஏசல் பாணம் - கண்டனச் சொற்கள் - சுடுமொழி - கடும் பார்வை - இத்தனையும் கொண்ட தீய சக்திகள், பிற்போக்குப் பிறவிகள், கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கழகத்தை ஆதரித்து கருத்துக்கள் சொல்லப்பட்டால், அதற்கு ஏடுகளிலே இடம் கிடையாது; அதே நேரத்தில் கழகத்திற்கு எதிராக ஒரு வார்த்தை சொல்லப்பட்டால் முதல் பக்கத்திலேயே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் போக்கு! அதிலே ஓர் இன்பம் காணும் நிலை!
துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்"
என்று எழுதி இருக்கிறார்.
பரிதி இளம்வழுதியை மனதில் கொண்டே எழுதியுள்ள கருணாநிதி இதில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது கையிலே காசு இல்லாத பொது கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே கட்டுக் கொடுக்க முயற்சி செய்வதாகக் கூறியுள்ளார்.
நல்ல முறையில் வருமானவரி கட்டி உழைத்துச் சம்பாதித்தக் காசு என்றால் அதைக் காக்க ஏன் கழகத்தை காட்டிக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்?. குறுக்கு வழியில் சேர்ந்த காசாக இருந்தால் மட்டுமே அதைக் காக்க ஆளும் வர்க்கத்தினரை நம்ப வேண்டும். வேறு வழியில் வந்த காசு என்றால் அதைச் சேர்க்க ஒரு வழியில் கருணாநிதியும் அதற்குத் துணை நின்றார் என்று தானே பொருள்?.
ஆ.ராசா, தயாநிதி, கனிமொழி என "கட்சியை வைத்து கையிலே காசு சேர்த்த"வர்களின் பட்டியல் நீண்டிருக்க, ஆ. ராசா போன்று பலிகடாவாக்கப்பட்டாலும் கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் துரோகிகளாக மாட்டார்கள் போலிருக்கிறது!. அதாவது, எப்படி வேண்டுமானாலும் "கையிலே காசு சேர்த்துக்கொள்; எப்போதும் கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இரு" என்று கருணாநிதி கூற வருகிறாரோ என்னமோ! கனிமொழி சிறையிலடைக்கப்பட்டபோது அவர் கூறிய சில வார்த்தைகளும் நினைவுகூரத்தக்கது!
அஇஅதிமுக- வில் அமைச்சராக இருந்து கொள்ளையடித்ததாக திமுக அரசால் வழக்குத் தொடுக்கப்பட்ட செல்வகணபதி, காசைக்காப்பாற்றத் திமுகவுடன் சேர்ந்தபோது கருணாநிதிக்கு இனித்தது; கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், முத்துச்சாமி போன்றோரும் திமுகவில் சேரும்போது அவருக்கு இனித்தது. ஒரு நீண்டநாள் தொண்டன், தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினால் உடன் துரோகி என்பதா? தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்பது அரசியலில் எப்போதும் எழுதப்படாத சட்டம் போலிருக்கிறது!
மொத்தத்தில் குறுக்கு வழியில் காசு சேர்த்த கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அதைக் கண்டும் காணாதது போல இருந்து விட்டு தற்போது ஓரம் போகியார் எழுதிய பாடலை நினைவுப் படுத்தும் கருணாநிதிக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் தெரிய வில்லை. இது தான் பூனை இளைத்தால் எலியும் மச்சான் முறை கொண்டாடும் என்பதோ?
| < முந்தைய செய்தியை வாசிக்க... |
|---|