தூத்துக்குடியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் சேது லட்சுமி சுபம் கிளினிக் என்ற பெயரில் தனியாகவும் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் என்பவரின் மனைவி நித்யா 5 மாத கர்ப்பிணி.
நித்யா, மருத்துவர் சேது லட்சுமியிடம் கர்ப்பம் தொடர்பான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெற்று வந்துள்ளதாகத் தெரிகிறது. நித்யாவுக்குக் கடந்த 30 அன்று திடீரென வயிறு வலிக்கவே மருத்துவர் சேது லட்சுமியிடம் கொண்டு சென்றுள்ளனர். நித்யாவைப் பரிசோதித்த மருத்துவர் சேது லட்சுமி, நித்யாவின் வயிற்றிலுள்ள சிசு இறந்து விட்ட நிலையில் அதை ஆபரேசன் செய்து வெளியே எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக நித்யாவுக்கு ஆபரேசன் செய்து இறந்துவிட்ட சிசுவைக் கருப்பையிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். இருப்பினும் நித்யாவின் உடல்நிலை மோசமாகவே, நித்யாவை அதிக மருத்துவ வசதிகளுடன்கூடிய வேறு மருத்துவமனையில் சேர்க்கப் பரிந்துரைத்துள்ளார் மருத்துவர் சேது லட்சுமி. வேறு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனில்லாமல் நித்யா இறந்து விட்ட நிலையில், மனைவியின் இறப்புக்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் எனக்கருதி மருத்துவர் சேது லட்சுமியைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளார் மகேஷ்.
இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதியன்று இரவு தம் கிளினிக்கில் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டு இருந்த மருத்துவர் சேது லட்சுமியை மகேஷ் மற்றும் அவருடன் வந்த சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
ஆபத்தான நிலையிலிருந்த நித்யாவை, அதுவரையிலான சிகிட்சைக்கான பணத்தைக் கட்டி விட்டே வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று முரண்டு பிடித்த மருத்துவர் சேது லட்சுமியின் பணத்தாசையே நித்யா மரணத்துக் காரணம் என்று ஒருதரப்பால் சொல்லப் படுகிறது. மற்றொரு புறம் மருத்துவர் சேது லட்சுமி ரூ 40 க்கு மேல் யாரிடமும் பணம் பெற மாட்டார். அவர் நல்ல மருத்துவர் என்ற கருத்தும் வைக்கப் படுகிறது.
ஏற்கெனவே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு ரவுடி எனப் பெயரெடுத்த ரமேஷ், தம் மனைவிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் என்ற மதிப்பையும்மீறிக் கொலை செய்யும் அளவு வாய்ச்சண்டை இருவருக்குமிடையே நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
நித்யா, நித்யாவின் சிசு மற்றும் மருத்துவர் சேது லட்சுமி என மூன்று உயிர்கள் போனது போதாது என்று அரசு மற்றும் தனியார்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் தங்கள் பங்குக்கு வேலை நிறுத்தம் செய்து திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு உலை வைத்ததோடு அல்லாமல் ஆயிரக் கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்து தங்கள் தொழில் பக்தி(!)யைக் காட்டியுள்ளனர்.
நடந்த சம்பவங்களுக்கு இரு தரப்பிலும் பல்வேறு நியாயமான(?) காரணங்கள் கூறப் பட்டாலும் முழுத் தவறும் அரசின் பக்கமே. சிறு பெட்டிக் கடை வைத்தால் கூட வணிக வரி பதிவு எண், வருமானவரி கணக்கு எண் என ஆயிரத்தெட்டுக் குடைச்சல் கொடுக்கும் அரசு தரப்பு, மனித உயிர்களுடன் சம்பந்தப் பட்ட இது போன்ற மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த வரைமுறை ஏற்படுத்தியுள்ளதா என்று தெரிய வில்லை.
மருத்துவர் சேது லட்சுமி anesthesia எனப் படும் மயக்க மருந்து கொடுக்கும் துறையில் வல்லுநர். இவர் எப்படி அறுவை சிகிச்சை செய்து வருகிறார் என்று தெரிய வில்லை. சிறிய கிளினிக்கில் அறுவை சிகிச்சை அளிக்கும் அளவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகள் இருக்கிறதா என்றும் தெரிய வில்லை. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு ஒரு கிளினிக்கை நடத்துகிறார் என்றால் நோயாளியின் அவசரத் தேவைக்கு வேறு மருத்துவர்கள் அந்த கிளினிக்கில் பணி புரிகிறார்களா? அல்லது நோயாளியின் அவசரத் தேவைக்கு அரசு வேலையைக் கவனிக்காமல் கிளினிக் சென்று விடுவாரா? என்ற கேள்விகளுக்கு விடை தெரிய வில்லை.
காலாவதியான மருந்து, போலி மருத்துவர்கள் என எல்லாவற்றிலும் ஒவ்வொரு சம்பவம் நடைபெற்ற பின்னர் பாடம் படிக்கும் அரசாங்கம் இச்சம்பவத்திலும் மருத்துவர் சேது லட்சுமி கொலைக்குப் பிறகாவது பாடம் படித்து தனியார் கிளினிக்குகளை முறைப் படுத்த வேண்டும். இல்லையேல் இழப்புக்கு ஈடு இழப்பே என்ற அளவில் இது போன்ற கொலைகள் தொடருவதை அரசால் தடுக்க முடியாது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed