இன்று இந்தியக் குடியரசின் 63 ஆவது குடியரசு தினம். இன்னுமொரு (அரசு) கொண்டாட்ட, (அரசு)விடுமுறை நாள்! தேசிய திருநாள்களில் மற்றுமொன்று.
தலைவர்களுக்கு.. குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுகளில் "பாதுகாப்பாக" வலம்வந்து "சுதந்திர" குடியரசைப் பறைசாற்றும் நாள்! குழந்தைகளுக்கோ.. கொடியேற்றி மிட்டாய் வழங்கப்படும் ஒருநாள். மக்களைப் பொருத்தவரை மற்றுமொரு அரசியற் சடங்கு.
"வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று கவிஞனொருவன் கேட்டிருந்தான். அதே கேள்வியை இங்கேயும் பொருத்தலாம்.
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவடைந்தாலும், குடியரசாகி 62 ஆண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டாலும், சுதந்திரத்தின் பொருளை, குடியரசின் விளக்கத்தை நம்மை ஆள்பவர்களும் நாமும் தெளிவாக விளங்கியுள்ளோமா? இந்த நாட்களைக் கொண்டாடுகிற நாம், சுதந்திரத்தையும் குடியரசு என்பதன் முழுமையையும் அனுபவித்ததுண்டா?
"மக்களால்; மக்களுக்காக; மக்களின்பொருட்டு" என்பதே குடியரசு என்பதற்கான இலக்கணம். ஆனால் யதார்த்தத்தில் நம்நாட்டில் என்ன நடக்கிறது?
அரசின் பார்வையில் மக்கள் என்போர் யார்? அம்பானிகளும் டாடா பிர்லாக்களும் தானா? கடைநிலையில் உள்ள குடிமகன் இந்தியாவின் விடுதலையுணர்வை, குடியரசான மகிழ்ச்சியை; மதிப்பை அனுபவிக்கின்றானா?
நாட்டின் முதுகெலும்புகளாக வர்ணிக்கப்படும் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்கையில் அது குறித்து விசனப்படாத இந்திய அரசு, அம்பானிகள் கோடிகளுக்கு அடித்துக்கொண்டால் விசனப்படுகிறதே, இந்தியா குடி(மக்களின்) அரசு தானா?
கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்பவர்களுக்கும் வழங்கப்படும் விருதுகள் ஒருபக்கம். மின்கட்டணத்தில் மீதம் வைத்தாலும் தண்டிக்கப்படும் சாமானியர்கள் மறுபக்கம். இந்தியா குடியரசுதானா?
பன்னாட்டு முதலாளிகளுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பு ஒருபக்கம். உள்நாட்டு குடிமகன் எளிதில் தொழிற்தொடங்கவிடாமல் சிவப்புநாடா கெடுபிடிகள் மறுபக்கம். இந்தியா குடியரசு தானா?
கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு ஒருபக்கம். வரிப்பணம் அரசாங்க கேளிக்கைக்கூத்துகளிலும், அவசியமற்ற வழக்குகளின் கேலிக்கூத்துகளிலும் வீணடிக்கப்படுவது மறுபக்கம். இந்தியா குடியரசுதானா?
குடிநீருக்காக காலிக்குடங்களுடன் பலகிலோமீட்டர் தொலைவிற்குக் காத்துகிடந்தும் நீரள்ள முடியாமல் தவிக்கிறார்கள் இந்தியத் தாய்மார்கள். கோடையிலும் நிலத்தடிநீரை; ஜீவநதிகளை உறிஞ்சிக் கொழுத்து காசள்ளிச் செல்கிறார்கள் கோக்கும் பெப்ஸி கம்பெனிகளும்.
இந்தியா குடியரசுதானா?
விசாரணையேயில்லாமல் தண்டிக்க வகைசெய்யும் கொடுஞ்சட்டங்கள் தடா பொடா எஸ்மா பஸ்மா என்று அப்பாவிகளை அலறவிடுவது ஒருபக்கம்.
கிரிமினல்களே கோலோச்சும் தேர்தல் களங்களும், அமைச்சரவைகளும் மறுபக்கம். இப்போது சொல்லுங்கள், இந்தியா குடியரசு தானா?
அன்றைக்குப் பணக்கார மாணவர்கள் தூரத்தில் ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்டபோது, ஆஸ்திரேலியப் பிரதமரை அழைத்துப் பேசுவதில் ஆர்வங்காட்டியது இந்திய குடி அரசு. ஆனால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பக்கத்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றனரே! கவலையற்று தானே இருக்கிறார்கள் கிருஷ்ணாக்கள்?
ஆக, சுதந்திரமும் குடியரசும் வெற்றுச்சொற்களா? வெள்ளைக்காரர்களைத் துரத்திவிட்டு கொள்ளைக்காரர்கள் அமர்ந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மையெனில் சுதந்திர நாளிலும் குடியரசுநாளிலும் மிட்டாய்கள் இனிக்குமா?
இந்திய அரசே, பிரதமரே, மாநில முதல்வர்களே, நல்லாட்சி வழங்குங்கள்.
எதிலும் இந்தியக் குடிமகனை முதன்மைப்படுத்துங்கள். சுதந்திரத்தின், குடியரசின் வலிமையை, உண்மையை கடைநிலை இந்தியனும் உளப்பூர்வமாக உணர்ந்துகொள்ள என்னென்ன செய்யப்படவேண்டுமோ, அதைத் துரிதப்படுத்துங்கள். செயற்படுங்கள். அப்புறம்பாருங்கள், தேசியத் திருநாள் கொண்டாட்டங்களில் உங்களுக்குக் 'கண்ணாடிக் கூண்டுகள்' தேவைப்படாது. மக்களின் அபிமானமே உங்களைப் பாதுகாக்கும்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
அப்ப ... இன்னும் எத்தினி வருஷங் கழிச்சு நாமெல்லாஞ் சேர்ந்து குடியரசு நாள் கொண்டாடுவது?
"மக்களால்; மக்களுக்காக; மக்களின்பொருட்டு"
மக்களே தம்மைத்தாம் ஏமாற்றிக் கொண்டு குடியரசு தின விடுமுறையில் சேனல்களில் 'உலக வரலாற்றில் முதன்முறையாக' பார்த்து குடியரசு தினத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஜெய்ஹிந்த்.. இந்தியா ஒளிர்கிறது எல்சிடிகளிலும் எல் ஈடீகளிலும்..
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed