ஆஸ்பிரின் மாத்திரையின் நற்குணங்கள்!

ஜனவரி 18, 2019

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் என்று கூறுவார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… ‘தினமும் ஒரு ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்; உங்கள் ஆயுள் அதிகரிக்கும்’ என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ‘‘என்ன, ஒரு ரூபாய் மாத்திரைக்கு இத்தனை மகத்துவமா?’’ என்று கேட்பது காதில் விழுகிறது.

சாதாரணமாக காய்ச்சல், தலைவலி, உடல் வலிக்குத் தரப்படுகிற ஆஸ்பிரின் மாத்திரை உயிர் காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்பது உண்மை! இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், அதிக கொழுப்பு உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள், நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆகியோருக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறையத் தொடங்குவதால் வரும் மாரடைப்புக்கு ‘ஆஞ்சைனா’ (Angina) என்று பெயர். மாடிப்படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால், நெஞ்சுவலி குறைந்துவிடும். இதயத்துக்கு ரத்தமும் ஆக்ஸிஜனும் தேவையான அளவுக்குக் கிடைக்காத காரணத்தால் இந்த வலி வருகிறது.

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவது போல் கடுமையாக வலிக்கும். இந்த வலி கழுத்து, தாடை, இடதுபுஜம், இடது கைவிரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்த்துக் கொட்டும். ஓய்வெடுத்தாலும் நெஞ்சு வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மயக்கம் வரும். இதுதான் முழுமையான மாரடைப்பு (Myocardial infarction). ரத்தக்குழாயில் கொழுப்பு / ரத்தக்கட்டி அடைத்துக்கொள்வதால் இது ஏற்படுகிறது.

இந்த இரண்டுக்கும் உயிர் காக்கும் மருந்தாக ஆஸ்பிரின் விளங்குகிறது. ரத்தக்குழாயை விரிக்கிற தன்மை ஆஸ்பிரினுக்கு உண்டு என்பதால், ‘ஆஞ்சைனா’ வலியின்போது சுருங்கிய நிலையில் உள்ள கரோனரி ரத்தக்குழாய்களை விரித்துவிடுகிறது.

ரத்தம் இதயத்தசைகளுக்குத் தடையில்லாமல் கிடைத்துவிடுகிறது. இந்தக் காரணத்தால் ஆஞ்சைனா வலி குறைந்துவிடுகிறது. இதுபோல் ரத்தம் உறைகிற தன்மையைத் தடுக்கும் குணமும் இதற்கு உண்டு என்பதால், இன்ஃபார்க்‌ஷன் எனும் மாரடைப்பிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.

எனவேதான், கோவையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் அண்மையில் அளித்த பேட்டியில், ‘‘மாரடைப்பு அறிகுறிகள் தெரிய வரும்போது உடனடியாக டிஸ்பிரின் (ஆஸ்பிரின்) 325 மில்லி கிராம், அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடாப் 150 மி.கி. சாப்பிட்டால் ரத்தம் உறைவதைத் தடுத்து, மாரடைப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும். பின்னர் மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொண்டால் உயிர் பிழைக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.இந்த அற்புத ஆஸ்பிரினை யார், எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

கி.மு.400ம் ஆண்டில் கிரேக்க மருத்துவ மேதை ஹிப்போகிரேடஸ் பெண்களுக்குப் பிரசவ வலியைக் குறைப்பதற்கு கருநொச்சி இலைகளைச் (Willow Leaves) சாறு பிழிந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1763ல் இங்கிலாந்து மருத்துவர் எட்வர்டு ஸ்டோன் என்பவர் கருநொச்சிப் பட்டையிலிருந்து மருந்து தயாரித்து மூட்டுவாதக் காய்ச்சலைக் (Rheumatic fever) குணப்படுத்தினார். ஆனால், இந்த இருவருக்கும் கருநொச்சி இலையிலும் பட்டையிலும் என்ன மூலப்பொருள் இருக்கிறது என்பது தெரியவில்லை.

1823ல் இத்தாலிய விஞ்ஞானிகள் சிலர் கருநொச்சிச் சாற்றிலிருந்து ‘சாலிசின்’ (Salicin) மூலப்பொருளைப் பிரித்தெடுத்து, அதுதான் வலிகளைப் போக்குகிறது என்று நிரூபித்தனர். இதைத் தொடர்ந்து பிரான்ஸ் விஞ்ஞானிகள் சாலிசிலிக் அமிலத்தை இதிலிருந்து தயாரித்தனர்.

ஆனால் இது குடலுக்குள் சென்றதும் குடல் தசைகளை அரித்துப் புண்ணாக்கி வலி ஏற்படுத்திய காரணத்தால், 1893ல் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகள் ‘அசிடைல்’ எனும் வேதிவகையை அதனுடன் சேர்த்து, குடலைப் பாதிக்கும் பக்க விளைவைக் குறைத்தனர். ‘அசிடைல் சாலிசிலிக் அமிலம்’ என்று அதற்குப் பெயரிட்டனர்.

என்றாலும் இன்று நாம் பயன்படுத்தும் ஆஸ்பிரின் மருந்தை ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி ஃபெலிக்ஸ் ஹாஃப்மேன் (Felix Hoffmann) என்பவர்தான் கண்டுபிடித்தார். இவர் பேயர் (Bayer) மருந்து நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி.

சாலிசிலிக் அமிலத்துடன் அசிட்டிக் அன்ஹைட்ரைடை அசிட்டிலேஷன் முறையில் கலந்து செயற்கையான வழியில் அசிட்டைல் சாலிசிலிக் அமிலத்தைத் தயாரித்தார். முதன்முதலில் இதை ‘ஆஸ்பிரின்’ என்ற பெயரில் 1899ல் மனிதப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் இவர்தான்.

இந்த மருந்தின் மகத்துவம் முழுமையாக அறியப்பட்டது 1974ம் ஆண்டில். அதுவரை வலி நிவாரணியாகவும் காய்ச்சல் மருந்தாகவும் மட்டுமே அறியப்பட்டிருந்த ஆஸ்பிரினுக்கு மாரடைப்பைத் தடுக்கும் குணமும் உண்டு என்று இங்கிலாந்து மருத்துவர் பேராசிரியர் பீட்டர் எல்வுட் கண்டுபிடித்தார்.

சாலையின் மத்தியில் கற்களைக் குவித்து விட்டால் பயணம் தடைபடுவதைப்போல, ரத்தக் குழாய்க்குள் தட்டணுக்கள் ஓரிடத்தில் குவிந்து, ரத்தம் உறைந்து மாரடைப்பு வருவதுண்டு. இதைத் தடுக்கும் பண்பு ஆஸ்பிரினுக்கு உள்ளதால் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது என்பதை பல சோதனைகள் வாயிலாக இவர் உறுதி செய்தார்.

ஆஸ்பிரின் வலியைப் போக்குகிறது என்று மட்டுமே பொதுவாக அறியப்பட்டிருந்த நேரத்தில் ‘உடலில் வலிகளை உண்டாக்குகிற புராஸ்டாகிளான்டின் உற்பத்திக்குத் தேவையான என்சைமை ஆஸ்பிரின் தடுக்கிறது. இதன் காரணமாகவே ஆஸ்பிரின் சாப்பிட்டதும் வலி குறைகிறது’ என்று இங்கிலாந்து பேராசிரியர் ஜான் வானே மற்றொரு மகத்துவத்தைக் கண்டுபிடித்தார். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக 1982ல் இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

ஆஸ்பிரின் மகத்துவம் இத்தோடு நிற்கவில்லை. முதுமையில் ஏற்படுகிற பக்கவாத நோய், ஞாபக மறதி, கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிற ‘முன் பிரசவ வலிப்பு நோய்’, குடல் புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கவும் இது பயன்படுவதாக அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் நிரூபித்துள்ளனர். மிகவும் குறைந்த செலவில் அரிய உயிரைக் காக்கும் ஆஸ்பிரினுக்கு சபாஷ் போடலாமா!

நன்றி: முத்தாரம்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...