வளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு ஒரு டாக்டரின் அறைக்கூவல்!

மார்ச் 28, 2019

வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா , ஐக்கிய அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளுக்கு நமது நாட்டில் இருந்து பணி நிமித்தம், வியாபார நிமித்தம் சென்று வாழும் சகோதர சகோதரிகளுக்கானது இந்த பதிவு.

உலகில் வேறு இனக்குழுக்களுக்கு நீரிழிவு / உடல் பருமன் / ரத்த கொதிப்பு / இதய நோய் போன்றவை வரும் வாய்ப்பை விடவும் நமக்கு அதாவது இந்தியாவைச் சேர்ந்த அதிலும் தென்னிந்தியாவைச் சேர்ந்த கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளம் , தமிழ்நாடு மற்றும் இலங்கை நாடு ஆகியவை அடங்கிய நமக்கு மிக மிக அதிகம் என்பதை நாம் உணர வேண்டும்.

அதற்கு பிரத்யேக காரணம் :

1. நமது மாவுச்சத்து அதிகம் உண்ணும் வாழ்க்கை முறை.
2. உடல் உழைப்பு குறைந்தது.
3. நமது ஜீன்கள்

இதில் நமது நிலப்பரப்பை விட்டு நமக்கு பழக்கம் இல்லாத பாலைவன பூமியில் பணி நிமித்தம் செல்கிறோம். அங்கு சென்று பணம் சம்பாதித்து வருகிறோமோ இல்லையோ… நீரிழிவு / இதய நோய் / ரத்த அழுத்தம் / சிறுநீரக நோய் என்று எதையாவது தாயகத்துக்கு கொண்டு வருகிறோம்.

ஏன் ?

பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களில் மூன்றில் ஒருவருக்காவது நீரிழிவு / ரத்த அழுத்தம் இருக்கிறது. இது தமிழகத்தில் நிலவும் நீரிழிவு சதவிகிதத்தை விட அதிகம், காரணம்.

அங்கு நாம் உட்கொள்ளும் அதிக மாவுச்சத்து உணவு முறை தான். எளிதாக கிடைக்கிறது என்று வரைமுறையின்றி உண்ணப்படும் குப்பூஸ் ரொட்டி. மலிவாக கிடைக்கும் குளிர்பானங்கள். பர்கர்கள்.. பீட்சாக்கள்.. செயற்கை இனிப்பு கலந்த உணவுகள்.. என்று குடும்பங்களை விட்டு தனியே சுதந்திரமாக வாழும் ஆண்மகன்கள் தங்கள் நா விரும்பியதை ருசிக்கின்றனர்.

அதனால் உடலுக்கு கேடா? நல்லதா ? என்று ஒரு நொடி உணர்ந்தால் நமக்கு ஒவ்வாத பொருட்களை உண்பதில் இருந்தும் தவிர்த்துக்கொள்ளலாம். இன்னும் பலர் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாவதைக் காண முடியும்.

தனிமை தரும் துயரை மறக்க அவ்வாறு செய்கின்றனர். ஆனால் எந்த சாக்கு போக்கு கூறியும் புகை போன்ற பழக்கங்களை நியயாப்படுத்திட முடியாது. வளைகுடா நாடுகளில் நான் பிரச்சனையாக உணர்வது மிக எளிதாக குறைவான விலையில் கிடைக்கும் குளிர்பானங்கள்தான்.

குளிர்பானங்களை தண்ணீர் போல பருகுவதை பார்த்திருக்கிறேன். இப்போது நமது மக்களிடையே சிறிது அது குறித்த விழிப்புணர்வு வந்திருப்பது மகிழ்ச்சி. கண் கெட்ட பிறகு மோனாலிசா ஓவியத்தை ரசித்த கதையாய் பலருக்கும் தங்களுக்கு நீரிழிவு வந்த பின்னே இந்த அறிவு கிடைத்திருக்கிறது.

இருப்பினும் அதுவும் நன்மைக்கே. வளைகுடா நாடுகளுக்கு தினந்தோறும் அணி அணியாய் இங்கிருந்து இளைஞர் படை வேலைக்கு செல்கிறது. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கண்ணில் கண்டதையெல்லாம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று இல்லை. உங்கள் உடலுக்கு அது சரி வருமா வராதா என்று பார்த்து உண்ண வேண்டும்.

‘காமன் மேன்’ உணவு முறையில் இருப்பவர்கள் பின்வரும் உணவு அட்டவணையை பயன்படுத்தலாம்

காலை : இனிப்பு இல்லாத சுலைமானி டீ

காலை உணவு: 4 முட்டைகள்

காலை ஸ்நாக்ஸ்: வெள்ளரிக்காய் (200 கிராம்) + ஒரு சுலைமானி டீ

மதிய உணவு : 100 கிராம் சமைக்கப்பட்ட சாதம் + 100 கிராம் கீரை/ காய்கறிகள்

மாலை சிற்றுண்டி : ஒரு ஆப்பிள் / இரண்டு ஆரஞ்சு அல்லது 40 பாதாம் பருப்பு + ஒரு பால் டீ 150மில்லி ( சீனி / சர்க்கரை இல்லாமல்)

இரவு உணவு: 2 தோசை / 3 இட்லி / 4 இடியாப்பம்

குறிப்பு : மதியம் மற்றும் இரவு உணவோடு 150 கிராம் கறி / மீன் போன்ற அசைவ உணவுகளை எடுக்கலாம். தாகம் எடுக்கும் போது உப்பு கலந்த எலுமிச்சை சாறு பருகலாம். தினமும் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்

❌ இனிப்பு முடிந்தவரை தவிர்ப்பது நல்லது .
    சீனி சர்க்கரை கேடு தரும்
❌ புகை/மது தவிர்க்க வேண்டும்
❌ எண்ணெயில் பொறித்த உணவுகள் தவிர்க்க வேண்டும்
❌fried chicken தவிர்க்க வேண்டும்
❌குளிர்பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
❌கோதுமை / மைதா முடிந்தவரை தவிர்த்தல் நலம்
❌முடிந்தவரை ரீபைண்டு எண்ணெய் தவிர்க்கலாம். நெய் / நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

இந்த மேற்சொன்ன உணவு முறை இக்கால இளைஞர்களுக்கு நீரிழிவு வரும் வாய்ப்பை மட்டுப்படுத்தும். ( உறுதியாக நீரிழிவு வராது என்று சத்தியம் செய்து கூற இயலாது. ஆனாலும் நீரிழிவு வரும் வாய்ப்பை குறைக்கும்)

இத்துடன் தினமும் ஒரு மணிநேரம் நடை பயிற்சி செய்தால் நன்மைகள் கூடும்.
வேலையே தினமும் நடப்பது என்பவர்கள் தனியாக நடக்கத் தேவையில்லை.

குடும்ப வறுமை, திருமணக்கடன், பிள்ளைகளின் படிப்பு, ஆசைக்கு ஒரு வீடு
என்று தங்களது குடும்பம் செழிக்க வளைகுடா நாடுகளுக்கு சென்று தனிமையில் உழைக்கும் நம் மக்கள் திரும்பி வரும் போது நோயுடன் வருவது வருந்தத்தக்கது.

நம்மால் முடிந்த அளவு தொற்றா நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ள இயலும். மனமிருந்தால் மார்க்கமுண்டு….

டாக்டர்: ஃபரூக் அப்துல்லா

 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...