அழுகிறது அமைதிச் சின்னம்

மார்ச் 06, 2018 1265

சின்னச்சின்ன இதழ்களும்
சிரியாமல் சின்னாபின்னமாக சிதறும் சிரியாவைக்கண்டு சகிக்காமல்
குமுறுகிறேன்

சுதந்திரமாகப்பறந்த எங்களை
தந்திரமாக அடிமைகளாக்கினீர்கள்

உலகியலுக்கு அநீதி இழைத்த
நீங்களே
உங்கள் தோதுக்காக
அமைதிக்குழுவென்று
ஒன்று அமைத்து
பின் நீங்களே
அமைதி குலைக்கிறீர்கள்

''வெள்ளம் வருமுன் அணைக்கட்டு''
என்று வெறும் பழமொழியை
கட்டிக்கொண்டீர்கள்

உங்கள் கண்முன்னே நிகழும்
இந்த படுபாதகங்களுக்கு
என்ன முன்நடவடிக்கையெடுத்தீர்கள்

கொள்கையில் அன்பென்ற சொல்லை இணைத்து
கொல்லைப்புறமாக கொத்துகொத்தாய்
கொன்று குவிக்கிறீர்கள்

நீங்கள் குண்டு வீசிக்கொல்லும்
எந்த இடத்தில் எங்களால்,
ஏன்? எந்த உயிர்தான் வாழமுடியும் ?

நித்தம் யுத்தமூட்டி
ரத்தமும்,சதையும் பூசிக்கொண்டு
புத்த வேடம் போடுகிறீர்கள்

கணிதத்தில் ஒரு சிக்கலை உருவாக்கி
அதைத்தீர்க்க ஒரு வாய்ப்பட்டால்
அந்த சிக்கலுக்கு
தீர்வு சொல்லித்தருவது ஒரு கலை
அது நன்மைதருகிற கலை

கணினி நிறுவனங்கள் தரும் மென்பொருள்களில்
மின்னணு விஷக்கிருமிகள்(வைரஸ்)
தானே உண்டானவையா?
உண்டு பண்ணப்பட்டவைதானே ?
இதில் என்ன நன்மையைகண்டீர்கள்?

உலகமென்ன உங்கள் பள்ளிமானாக்களா?
இல்லை நீங்கள் உருட்டி விளையாட
சிறுவர்கள் கைக்கோலிகுண்டுகளா?
ஏன் மனிதத்தை கேலிக்களமாக்குகிறீர்கள்?

அற்ப விஷயங்களுக்கு
விஷக்கணைகளை ஏவுகிறீர்கள்
நாகசாகியும்,ஹிரோஷிமாவும் பேரழிவுகளின்
வரலாற்றை சொல்லித்தரவில்லையா?

ஒரு அணு பிளந்தபின் அதன் ஆற்றல்
பெருக்கமடைந்துகொண்டேயிருக்கும்
என்பதுதானே தத்துவம் அப்படியானால்
வெடித்த இடம் மட்டும்தான் சேதமா?
பகுத்தறிவாளிகளே சிந்தியுங்கள்

துப்பாக்கிகளும்,கணைகளும்
கக்கும் அனலில் சிக்கிய
அபலைகளின் அவலக்குரல்கள்
கேட்டும் அமைதிக்குழுக்கள்
ஏன் மௌனம் காக்கின்றன?

ஏன்?மௌனமென்பதற்கு
மறுபொருள் அமைதி என்பதாலா?

தீவிரமாக மனிதப்பேரழித்தலை
அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது
ஒரு கொடுங்கோலரசு
உங்கள் பார்வையில்
தீவிர வாதமென்பது எது?

உங்கள் தேவைகளுக்கு
அமைதிக்கு சின்னமாக
எங்களை ஏன் அமைத்தீர்கள்
யார்கேட்டார்கள் உங்கள்
பட்டமும்,பட்டயமும்

ஐந்தறிவான எங்களிடம்இல்லாத குழப்பங்கள்
ஆறறிவு ஜீவிகளானஉங்களில் எப்படிவந்தது?
நீங்கள் வடிவமைத்த இந்த சமாதான சின்னத்திற்கு
என்ன சமாதானம் சொல்லப்போகிறீர்கள்

உங்கள் தேவைகளுக்கு
பகுத்தறிவற்ற எங்களுக்கு
பெயரளவில் சின்னங்கள்தந்து
ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?

தயவு செய்து
இந்த ஐந்தறிவு ஜீவிக்கு
புரியச்செய்தால்
நியாயத்தை நிலைநாட்டினால்
உறுதியாக இறுதிமூசசு உள்ளவரை
உங்கள் அமைதிக்காக
எங்கள் சிறகுகளை விரிப்போம்.

உங்கள் உணவுக்காக
எங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
தயவு செய்து
எங்கள் உணர்வுகளை
வதைத்து கொல்லாதீர்கள்

தினை விதைகளைத்தின்று
வாழ்ந்துகொள்கிறோம்
இன்னும் எச்சமிட்டும்
மறுமலர்ச்சிகளும் தருகிறோம்

எதைக்கொன்று புதைத்தோம்?
மனம் பதைக்கிறது
எதைக்கொண்டு எங்களை
இதில் இணைத்தீர்கள்?

உங்கள் விதைகளை
நீங்களே புதைக்க
எங்களைக்கொண்டு
வினை விதைக்காதீர்கள்
எங்களுக்கு அது தலைகவிழ்வு

ஐந்தறிவைப்பொறுத்தவரை
ஒருவெடி ஒலிகேட்டாலே
அந்த இடம் வெற்றிடமாகிவிடும்
அடிபட்டவை அடிபட்டவைதான்
ஆனால்,
எந்த உயிரிடமும் இல்லாத சிறப்பு(பகுத்தறிவு)
மனிதர்களாகிய உங்களிடமுள்ளது

''இதோ இந்தக்குழந்தை தன்னுயிர் கொடுத்து
இன்னுயிர் காக்கிறது''

உலகில் உயிர்வளிகளை அழித்துவிட்டு
எந்த வளியைக்கொண்டு வழிசெய்யமுடியும்
மனிதமிருந்தால் வலிக்கவேண்டும்
மனமிருந்தால் உணரவேண்டும்

கற்றுக்கொள்ளுங்கள்
கற்றிருந்தும் கொல்லாதீர்கள்
இரக்கம் காட்டுங்கள்
இல்லையென்றால்
தயவுசெய்து நீங்கள்தந்த
அந்த அடையாளச்சின்னதத்தை
திரும்பப்பெற்றுக்கொள்ளுங்கள்
ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை
எங்கள் உணர்வுகளை
கொல்லாதீர்கள்,
கொடுமை செய்யாதீர்கள்
இல்லையென்றால்
இறைவன் நாடுவான்
ஒரு நாள் திரும்பித்தைக்கும்

தினை விதைத்தவன்
தினையறுப்பான்
வினை விதைத்தவன்
வினையறுப்பான்

''விதைத்தவன் உறங்கினாலும்
விதை ஒருபோதும் உறங்குவதில்லை''

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...