ஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்

April 13, 2018

ஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்

ஒரு பெண்ணை அழிக்கும் வழிமுறைகள்
எப்போதும் நாம் அறிந்ததைவிடவும்
ஒவ்வொரு முறையும்
புதிராக இருக்கிறது
அல்லது மனம் உடையச் செய்வதாக இருக்கிறது

ஒரு நாடோடி சிறுமியை கொல்ல
அவளைக் கூட்டுப் புணர்ச்சிக்கு ஆளாக்க
ஒரு கோயிலின் கருவறை வாசலைத் திறக்கிறார்கள்
உணவன்றி தன்ணீரின்றி
அவளை கட்டி வைக்கிறார்கள்
ஒரு வேட்டையாடிய பறவையை
ஒரு புதர் மறைவில் வைத்து நெருப்பில் சுடுவதுபோல
அவளை தெய்வத்தின் காலடியில் வைத்துப் புணர்கிறார்கள்

ஒரு வயோதிகன்
ஒரு எட்டு வயது சிறுமியைப் புணர்கிறான்
பிறகு ஒரு சிறுவன் அவளைப் புணர்கிறான்
பிறகு அவளை தேட வந்த போலீஸ்காரன் அவளைப் புணர்கிறான்
பிறகு யார் யாரோ அவளைப் புணர்கிறார்கள்
அந்தச் சிறுமிக்கு அதன் அர்த்தம்கூட தெரியாது

வனத்தில் தனது மேய்ச்சல் குதிரையைத் தேடிவந்தவளை
அவர்கள் ஒரு கொடும் இருளை நோக்கி
இடையறாத ரத்தப் பெருக்கை நோக்கி
நடத்தி சென்றார்கள்

எனக்கு இது மீண்டும் புரியாமல் போகிறது
நிர்பயாவை ஓடும் பேருந்தில் வைத்து
வன்புணர்ச்சி செய்தவர்கள்
பிறகு ஏன் அவளது பிறப்புறுப்பில்
ஒரு இரும்புக்கம்பியை சொருகினார்கள் என்று
ஆயிரம் முறை கேட்டும்
அந்தக் கணம் முழுமையாக விளக்கப்படாமல் இருக்கிறது

ஆசிஃபாவை கோயில் பிரகாரத்தின்
தூணில் கட்டி வைத்து
மயக்க மருந்து கொடுத்து
உணவளிக்காமல்
வரிசையாக
வன்புணர்ச்சி செய்தவர்கள்
பிறகு ஏன் அவளது பிஞ்சுக் கால்களை முறித்தார்கள்?
ஏன் அவளது தலையில்
க.ல்லைப்[போட்டு கொன்றார்கள்?

சிறுமியாக இருந்தாலும் அவள் ஒரு பெண்
அதுவும் அழிக்கபபடவேண்டிய ஒரு இனத்தின் பெண்
நாடோடியாக மேய்ச்சல் நிலங்களில் நிராதரவாக தூங்குபவள்
அவளை வேட்டையாடுவது சுலபம்
பெரும்பான்மையினால்
வெகு சுலபமாக.....!

-மனுஷ்ய புத்திரன்

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!