காற்றில் பரவும் கந்தக நெடி

மே 29, 2018 847

பொதுமக்கள் சாகும் செய்தி
பொடுபோக்காய் அறிவதில்
கடையராய் இருந்தாலும்
காசாசை வணிகச் சண்டாளர்தம்
கையூட்டப் பெற்றதில்
முதல்வர் யார்?

முதல்வருக்குத் துணையாய்
முந்தி வரும் இரண்டாமவர்
காது குத்து விழாவில்
கலந்துகொள்வதும்
கருத்தென்று சொல்லி
கட்டாயமாய் மக்களுக்கு
காது குத்தியும் விடுவதுமாய்
காலக் கோலம்.

தலையாட்டி பொம்மைகள் இரண்டை
தன்போக்கில்
ஆடவிட்டு
தமிழருக்கு
வேடிக்கை வைத்தியம் செய்யும் ஒருவரிடம்
நூதனமாய் மறைந்திருக்கலாமோ
'நூல்' ஏதேனும்.

ஆட்சியராய் காவலராய்
ஆடாத ஆட்டமிடும்
இவர்களின்
குறி தப்பாத துப்பாக்கி
குலையுயிராக்க
குமுறும் தேசத்தில்
ஆலைக் கசிவாய்
ஜனநாயகக் காற்றில்
ஃபாசிசத்தின் பாழ்நெடி.

 

-பாபுஜி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...