அனிதாவின் தங்கை!

ஜூன் 06, 2018 1703

இனி அவள் பெயர்
ப்ரதீபா இல்லை
இன்றிலிருந்து அவள் பெயர்
அனிதாவின் தங்கை 1,125

அனிதா 1,176
அனிதாவின் தங்கை 1,125
இனி தூக்கில் தொங்கும்
நமது ஒவ்வொரு பிள்ளைகளின் நெற்றியிலும்
அவர்கள் பெற்ற மதிப்பெண்களை எழுதுவோம்
பிறகு அவர்கள் எப்படி தோற்கடிக்கப்பட்டு
தூக்குக் கயிறை நோக்கி அனுப்பப்பட்டார்கள் என்பதை
அவர்கள் நடுகற்களில் குறித்து வைப்போம்

வருடா வருடம்
குருதிப்பலி கேட்கிறாள்
நமது காலத்தின் சரஸ்வதி
பலிபீடங்களில்
ஒரு பலியின் குருதி காய்வதற்குள்
மறு பலிகள் நிகழ்கின்றன

குலக்கல்வியைக் கடந்து
இப்போது வந்து சேர்ந்திருக்கிறோம்
கொலைக் கல்விக்கு

மருத்துவர்களின் பிள்ளைகள்
மருத்துவர்கள் ஆகிறார்கள்
கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகள்
உத்திரங்களில் நாக்கை கடித்துக்கொண்டு தொங்குகிறார்கள்
எலிபாஷாணத்தை அமுதைப்பருகுவது போல பருகுகிறார்கள்

தன் பிள்ளையின் உடலை வாங்க மறுத்து
பிணவறை வாசலில்
ஒரு தகப்பன் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறான்
சில நாட்களுக்கு முன்னர்தான்
தன் தகப்பனின் உடல்முன் நின்று
தேர்வு மைய வாசலில் ஒரு பையன்
கதறி அழுதான்
இந்தக் காட்சிகளுக்கு முடிவேதும் இல்லையா ?
இந்தகதைகளுக்கு கடைசி அத்தியாயம் என்று ஏதும் உண்டா ?

நான் சாவைப்பற்றிய கவிஞன்தான்
நான் சாவுக்கு காத்திருக்கும் கவிஞன்தான்
கொடுஞ்சாவுகளின் உடல்களை
அநீதி இழைக்கபட்டவர்களின் உடல்களை
சுமந்து நடக்காத ஒரு நாளேனும் இல்லை

நண்பர்களே உங்கள் டி.பியில் புகைப்படத்தை
மாற்றுங்கள்
இறந்தவர்களின் ஏராளமான டி.பி. படங்களை
நாம் பயன்படுத்திவிட்டோம்
செங்கொடியின் படம்
முத்துக்குமாரின் படம்
பாலச்சந்திரனின் படம்
அனிதாவின் படம்
ஸ்டெர்லைட் தியாகிகளின் படம்
இப்போது ப்ரதீபாவின் படம்
நமது டி.பி யில் வைக்க
இன்னும், ஏராளமான படங்கள் வர இருக்கின்றன
ஒரு பெரிய படுகொலை ஆல்பமே நம்மிடம் இருக்கிறது
சீக்கீரம் உங்கள் டி.பிகளை மாற்றுங்கள்

அனிதாவின் தங்கை 1,125
ஒரு கனவு முறிந்ததற்காக
தன்னைத்தானே முறித்துக்கொண்டாள்
நாம் இந்தக் கனவுகளைக்
காணாமல் இருந்திருந்தால்
நாம் இந்தக் கனவுகளை
நம் குழந்தைகளுக்கு ஊட்டாமல் இருந்திருந்தால்
நமக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளை
நாம் வென்றுவிடலாம் என அவர்களுக்கு
நம்பிக்கை அளிக்காமல் இருந்திருந்தால்
அனிதாக்களும்
அனிதாக்களின் தங்கைகளும்
உயிருடனாவது இருந்திருப்பார்களா?
கூலித்தொழிலாளிகள் பிள்ளைகள்
கூலித்தொழிலாளியாகவும்
வீட்டு வேலைக்காரிகளின் பிள்ளைகள்
வீட்டு வேலைக்காரிகளாகவும்
இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்திருப்பார்களா?
நான் மனம் கசந்து கண்ணீர் சிந்துகிறேன்

நம் குழந்தைகள்
தம் கனவுகளால் சாகிறார்கள்
தம் நம்பிக்கைகளால் சாகிறார்கள்
தம் எதிர்ப்பினால் சாகிறார்கள்

அனிதாவின் தங்கை 1,125
ஒரு யட்சியாக மாறிக்கொண்டிருக்கிறாள்
கொலைக்களம் செல்லும்
ஒவ்வொரு அனிதாக்களும் யட்சிகளாகி
ரத்த வேட்கையுடன் திரும்பி வருவார்கள்

அப்படித்தான் வரலாற்றில்
இதற்கு முன்பும் நிகழ்ந்திருக்கிறது
இனியும் அது
அப்படித்தானே நிகழ வேண்டும்?

- மனுஷ்ய புத்திரன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...