சேலம் புது பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 4.15மணிக்கு அரசு பஸ் ஒன்று புதுச்சேரிக்கு கிளம்பியது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை அடுத்த கொளத்தூர் ஸ்ரீதேவி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண கிருஷ்ண சுந்தர ஆனந்தம் (38) என்பவர் பேருந்து ஓட்டினார். அப்போது 45 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.
பேருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் சேலம் பொன்னாம்பேட்டை கேட் அருகே சென்றபோது ஓட்டுநர் கிருஷ்ண சுந்தரானந்தத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்தவர், பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், மயங்கி பேருந்துக்குள் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடத்துனர் ஐயனார் மற்றும் பயணிகள், கிருஷ்ண சுந்தரத்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார், ஓட்டுநரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த கிருஷ்ண சுந்தர ஆனந்தத்திற்கு மதுராம்பாள் என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி 45 பயணிகளையும் காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.