தீவிரவாதம் தேவையே!
சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com
நாட்டில் இருக்கும் சாதி என்னும் சதிவாதம், மதம் பிடித்த மதவாதம் என எத்தனையோ வாதங்களுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளின் புதிய வரவாகவும், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்தால், அதற்கு நான் எவ்விதத்திலும் பொருப்பேற்க முடியாது.
ஜனநாயகம் என்ற கட்டிடத்தை பாதுகாக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள அரசு, நிர்வாகம், நீதி மற்றும் செய்தி ஊடகங்களில் ஒவ்வொன்றுக்கும் தலையாய கடமைப் பொறுப்பு இருந்தாலும் அரசு, நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை உடையன.
அதாவது, இம்மூன்று துறைகளிலும் நான்தான் பெரியவன் என யாருமே சர்வாதிகாரமாக செயல்பட முடியாத அளவிற்கு இந்திய அரசமைப்பில் ஆங்காங்கே காற்புள்ளியும், அரைப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது. அதையும்தாண்டி தான்தோன்றித்தனமாக எத்துறை செயல்பட்டாலும் அதற்கு தற்காலிகமாக தீர்வும், நிரந்தர தீர்வும் காணப்படும் வகையில் முற்றுப்புள்ளி வைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவைகளை எல்லாம் அதிகார ஆணவ மமதையில் புரிந்து கொள்ள முடியாத அத்துறைச் சார்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் ஆடுவதும், பின் அடுத்தடுத்த கட்டமைப்புகளால் குட்டப்படும் போது, அடங்குவதுமான அலங்கோலம் அவ்வப்போது நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. இது நமது நட்புறவு நாடான பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் பிரதமர் மீது, அந்நாட்டு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து, பிரதமர் கிலானி நேற்று நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானது வரையிலான (அ)வலம் அரங்கேறியுள்ளது.
இந்த (அ)வலம் இதுவரை நம் நாட்டில் அரங்கேறாதது ஒருபக்கம் ஆரோக்கியமானதாக தெரிந்தாலும், மறுபக்கம் பரவலாக்கப்பட்ட அதிகாரம் தவறாகவும், தவறுதலாகவும் கையாளப்படுவது நாட்டின் முன்னேற்றத்தையே சீரழித்துக் கொண்டு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்.
நான்காவது தூணான செய்தி ஊடகம் இப்பரவலாக்கப்பட்ட அதிகாரத் தூண்களில் அவ்வப்போது படியும் தூசி, துருக்களை தனக்கே உரித்தான கலையில் அவ்வப்போதே அகற்றி, அத்தூண்கள் என்றென்றும் அப்பழுக்கற்றதாய் ஜொலிக்க காரண கர்த்தாவாகவும், சுதந்திரமாகவும் இயங்க வேண்டும்.
ஆனால், இந்நான்காவது தூணோ, சுதந்திரமாக இயங்குவதற்குப் பதில், தந்திரமாக, சந்தர்ப்பவாதமாக இயங்கி கொண்டு இருப்பது ஜனநாயகத்தின் துரதிருஷ்டம் என்றால், அது எள் முனையளவு கூட மிகையல்ல.
நம்மைச் சுற்றி நான்கு திசைகளிலும் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு செய்திகளாக கிடைக்கிறது என்றால், அதில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது ஊடகங்கள்தான். இந்த ஊடகங்களின் முக்கிய பணி கிடைக்கின்ற செய்தியைத் தனது புலனாய்வில் ஆய்ந்தறிந்து மக்களுக்குச் சொல்வதுதான் என்றிருந்த நிலை மாறி, கிடைக்கின்ற செய்தியை,
காவல் நிலைய கான்ஸ்டபில்கள் கைதியின் வாக்கு மூலங்களை எழுதுவது போல, கண்ணும் காதும் வைத்து கதை எழுதுவது...
உயிர்போன செய்தியை உணர்ச்சிப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், உயிரோட்டத்துடனும் சொல்லுவது...
இரட்டிப்பாக சொல்ல வேண்டிய செய்தியை இருட்டடிப்பு செய்வது...
இருட்டடிப்பு செய்ய வேண்டிய செய்தியை இரட்டிப்பாக்கி சொல்வது...
(ஆ)சாமிகளின் ஆபாசமான, அந்தரங்கமான காட்சிகள் ஏதும் கிடைத்து விட்டால் அதனை வெட்ட வெளிச்சமாக அடுத்தடுத்து ஒளிபரப்பி முகம் சுழிக்க வைப்பது...
நடிகர், நடிகைகளின் அந்தரங்க ஒளிப்படங்களை வெளியிட்டு காசு பார்ப்பது...
காவல்துறை மற்றும் நீதித்துறை தரும் செய்திகளை, அப்படியே ஜெராக்ஸ் மெஷின் போல வாந்தி எடுப்பது...
கவர் (லஞ்சப்பிச்சை) கொடுத்தால் எச்செய்தியையும் கவர் செய்வது (வெளியிடுவது)...
தனக்கு கிடைக்கும் தகவலை வைத்துக் கொண்டு, அதைப்பற்றி செய்தி வெளியிடுவேன் என்று அதில் சம்பந்தப்பட்டவரை மிரட்டி பிச்சை எடுப்பது...
பரபரப்பு விற்பனைக்காக உயர்நிலையில் உள்ளவர்களைத் தரம் தாழ்த்தி எழுதி, பின் பகிரங்கமாக மன்னிப்பு கோருவது...
போன்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்யத் தவறுவதில்லை.
ஊடகம் சார்ந்த ஊழியர்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் நிருபர்கள். நிருபர்கள் என்றால் நம்பகமான, தன்னால் ஆதாரப்பூர்வமாக நிருபிக்கத்தக்க தகவலைச் சொல்பவர்கள் ஆவர் என்ற நிலை மாறி, நிர்பந்தப்படுத்துபவர்கள், நிர்பந்தத்துக்கு அடிபணிந்து பணிபுரிபவர்கள் என்கிற துரதிருஷ்ட நிலையே உள்ளது.
இதுபற்றி பத்திரிகையில் பணியாற்றும் நம்பிக்கைக்குரிய கடமைப் பண்பாட்டு நண்பர் ஒருவருடன் உலாப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு இதழில் நிருபர் என்ற ஊழியர்களே கிடையாது என்றும், அதற்கு மாறாக, ‘இட நிரப்பிகள்’ என்பதே அவர்களது பணிப்பெயர் என்கிற அதிர்ச்சியான தகவலையும் சொன்னார்.
இவர்களின் வரம்பற்ற எழுத்து (சு)தந்திரம் பற்றியெல்லாம் யாராவது கேட்டால், என்னமோ இவர்களுக்கு மட்டும்தான் எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இருக்கிறது போன்ற மாய போர்வையைப் போர்த்திக் கொள்வார்கள். இந்த மாய மயக்கத்தில் சிக்கிய மக்கள், உண்மையில் எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் எழுத்து சுதந்திரம் இருக்கிறது, நமக்கெல்லாம் இல்லை என்று நம்பும் அவல நிலையுமே உள்ளது.
எனக்கு எழுத்தாளன் என்கிற எழுத்து உரிமைச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக கண்டபடி கண்மூடித்தனமாகவும், கற்பனையாகவும், கதையாகவும் எதைவேண்டுமானாலும் எழுதி விட முடியாது. மாறாக, எனது கடமை உணர்வோடு, சமூக கண்ணியத்தை மனதில் நிறுத்தி, சுய கட்டுப்பாட்டோடு, கன கட்சிதமாக, தெள்ளத்தெளிவாக, சரியான புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் மன சாட்சிக்கு விரோதமில்லாமல் எழுத வேண்டும்.
இதனைச் சுருக்கமாக சொல்லப்போனால், “விழிப்புணர்வு” (விழிப்பு + உணர்வு) என்று வ(ப)ழக்கத்தில் சொல்கி(றீர்கள்)றார்கள். இது சரியா?
அனுதினமும் சாலை விபத்தில் பல பேர் தங்களது இன்னுயிரை இழக்கிறார்கள். இப்படி இழப்பவர்கள் எல்லாம் விழிப்பு + உணர்வு இல்லாதவர்கள் என்றே நினைக்கிறோம். விழிப்புணர்வு என்றால் கண் விழித்திருத்தல் என்று தானே பொருள் வருகிறது. ஆனால், இதற்கு முன்பாக, அதற்கு நாம் எப்படி எப்படியோ அர்த்தம் எடுத்துக் கொண்டுள்ளோமே!
சாலை விபத்தில் சிக்கி தனது இன்னுயிரை இழப்பவர்கள் எல்லாம் பார்வையற்றோர் அல்ல. மாறாக, பார்வை உள்ளோரே என்கிற அதே சமயம், பார்வையற்றோர் ஒருபோதும் விபத்தில் சிக்கி உயிரிழப்பதில்லை. அப்படியே நடந்திருந்தாலும், அதற்கு பார்வை உள்ளவர்தான் காரணம்.
ஏனெனில், பார்வையற்றோர் வாகனங்களை ஓட்டுவதில்லை.
ஓ! இதனால்தான், அவர்கள் விபத்தில் சிக்குவதில்லை என நினைத்தாலும் தவறு. வாகனத்தைதான் ஓட்டுவதில்லையே தவிர, மற்றபடி சாலையில் தட்டுத்தடுமாறி நடமாடத்தான் செய்கிறார்கள். ஆனாலும், பார்வையுள்ள பாதசாரிகள் விபத்தில் சிக்குவது போல, பார்வையற்றவர்கள் சிக்குவதில்லை என்பதுதானே எதார்த்தம்.
அப்படியானால், உண்மையில் விழிப்பு + உணர்வு உள்ளவர்கள் பார்வைத்திறன் உடையவர்களா அல்லது பார்வைத்திறன் இல்லாதவர்களா என்கிற அடிப்படையான, ஆழமான கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது அல்லவா?
பார்வை உள்ளோர் எல்லாம் விழிப்பு + உணர்வு = விழிப்புணர்வால் மட்டுமே விழித்திருக்கிறார்கள். ஆனால், பார்வையற்றோர் விழிப்பு + அறிவு + உணர்வு = விழிப்பறிவுணர்வால் விழித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆக அறிவால் விழித்திருக்க வேண்டும்.
நாம் எவ்வளவு குருட்டுத்தனத்தில் இருந்திருக்கிறோம் என்று இப்போது புரிகிறதா?
இப்படிப்பட்ட விழிப்பறிவுணர்வு மிக்க செய்திகளை நான், எனது உற்றார், உறவினர், நண்பர் என அக்கம்பக்கத்தார்களுக்கும், மிக அதிகபட்சமாக, இந்நேரத்தில் உங்களுக்கும் மட்டுமேதானே சொல்ல முடிந்துள்ளது. ஊர், உலகத்திற்கெல்லாம் யார் சொல்ல முடியும்?
அனைத்து விதமான ஊடகங்களும்தானே! இதற்காகத்தானே இந்நேரத்தில் இதனை ஊடக விமர்சனமாக பதிவு செய்கிறேன்.
சரி, நம்ம தொட்டு, விட்ட விடயத்திற்கு வருவோம்.
நமக்கு தீவிரவாதம் தேவையே! இல்லையேல் நமது வாழ்க்கை நிச்சயமாக நல்வாழ்க்கையாக அமையாது. இதில் எனக்கு மட்டுமல்ல, உங்களில் யாருக்கும் கூட கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
நான் துணிந்து உண்மையாகவேச் சொல்வேன், நானொரு தீவிரவாதி என்று! அதேபோல், நீங்களும் தீவிரவாதி என்றே சொல்லுவேன்.
சட்ட விழிப்பறிவுணர்வு இருந்தால் சாதிக்கலாம் என்ற கருத்துக்களை மையப்படுத்தி தனது அனுபவ கருத்தைக் கட்டுரையாக நேற்றுவரை எழுதி வந்தவர், இப்படி திடீரென தீவிரவாதம் தேவை என்கிறாரே... இதற்கு மேல் படிக்க வேண்டாம் என நினைத்து, அடுத்த செய்திக்குப் போய் விடாதீர்கள்.
தீவிரவாதி, தீவிரவாதம் என்ற சொற்கள் இன்றும் அச்சு, ஒலி, ஒலி&ஒளி, இணையம் போன்ற அனைத்து செய்தி ஊடகங்களிலுமே தவறான கருத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது.
சமூக நலனுக்காக எவர் ஒருவர் தான் எடுத்துக் கொண்ட கடமை, கொள்கை நிறைவேற, வெளிப்படையாக அயராது தீவிரமாக பாடுபடுகிறார்களோ அவர்கள் அனைவருமே, ‘தீவிரவாதிகள்தான்’.
அப்படியானால், தற்போது தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம்...!?
எவருமே எதிர்பார்க்காத வகையில் சமூகத்தை சீரழிக்கும் நோக்கோடு, மறைமுகமாக அதிபயங்கரமான செயல்களை செய்பவர்கள் என்பதால், அவர்கள் ‘பயங்கரவாதிகளே’ தவிர, ஒருபோதும் தீவிரவாதிகள் அல்லவே அல்லர்.
(வாரண்ட் பாலாவின் சட்ட விழிப்பறிவுணர்வு கட்டுரைகளை இங்கு காணலாம்)
| அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
காவல் நிலைய கான்ஸ்டபில்கள் கைதியின் வாக்கு மூலங்களை எழுதுவது போல, கண்ணும் காதும் வைத்து கதை எழுதுவது...
ஊடகத் துறையில் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
//எனது கடமை உணர்வோடு, சமூக கண்ணியத்தை மனதில் நிறுத்தி, சுய கட்டுப்பாட்டோடு, கன கட்சிதமாக, தெள்ளத்தெளிவாக, சரியான புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் மன சாட்சிக்கு விரோதமில்லாமல் எழுத வேண்டும்.//
அற்புதமான கருத்து. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed