குவைத் பொதுமன்னிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!

February 20, 2018

குவைத்(20 பிப் 2018): குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் சுமார் 11 லட்சம் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி அனுமதிக்காலம் முடிந்தும் குவைத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேலை நீட்டிப்பு மற்றும் ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், விசா மற்றும் பணி அனுமதிக்காலம் முடிந்து சட்டவிரோதமான தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குவைத் அரசு கடந்த மாதம் பொதுமன்னிப்பு வழங்கியது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22-ம் தேதிக்குள் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் தண்டனை மற்றும் அபராதத்தொகையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்தது.

இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் தங்களது நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டனர். இந்திய தூதரகம் உள்பட பல நாட்டு தூதரகங்களில் போதிய அதிகாரிகள் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் நாடு திரும்புவது தாமதமானது. இதன் காரணமாக, ஏப்ரல் 22-வரை கால அவகாசம் நீட்டித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!