எங்கள் அன்புக்குரியவர்களை இழந்துவிட்டோம் - கதறும் சிரியா குழந்தைகள்!

February 26, 2018

டமாஸ்கஸ்(26 பிப் 2018): சிரியாவின் அரசப்படை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நூர் மற்றும் அலா என்ற இரண்டு சிறுமிகள் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் அரசப்படைக்கும் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதில் சிரியாவின் அப்பாவி மக்கள் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களுக்கும் மேலாக நடந்த அரசப்படை தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதில் நூற்றுக்கும் அதிகமானோர் குழந்தைகளாவர்.

இந்நிலையில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கவுட்டா என்று போர் நடக்கும் பகுதியில் வசித்து வரும் நூர் மற்றும் அலா என்ற இரண்டு சிறுமிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை கதற வைத்துள்ளது.

அவர்கள் இருவரும், "நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். எங்கள் பகுதியில் தாக்குதல் நடந்து இருக்கிறது. எங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள். நாங்கள் வாழ விரும்புகிறோம் சாக விரும்பவில்லை. எங்கள் அருகில் இருந்த அன்புக்குரியோர்கள் எல்லாம் மரணித்துவிட்டார்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம். நாளை எப்படியோ என தெரியவில்லை '' என்று இவர்கள் கதறுவது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

மேலும் அருகே காயம்பட்டு கதறும் குழந்தைகளை காட்டி உலகத்திற்கு எங்கள் மீது இரக்கமில்லையா? எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே என்று அவர்கள் கூறுவது கரையாத மனதையும் கரைய வைக்கிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!