ரியாத் காயிதே மில்லத் பேரவை கருத்தரங்கம்!

March 07, 2018

ரியாத் (07 மார்ச் 2018):ரியாத் காயிதே மில்லத் பேரவையின் சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் கடந்த வெள்ளி 02/03/2018 மாலை 5 மணியளவில் ரியாத் பத்தாஹ் கிளாசிக் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது.

பேரவை தலைவர் மௌலவி கலந்தரி சுலைமான் பைஜி தலைமையில் நடைபெற்றது. பேரவையின் செயற்குழு உறுப்பினர் செய்யது அஹமது ஜமாலிகிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியை பேரவை பொதுச்செயலாளர் லால் பேட்டை எஸ்.எம்.முஹம்மது நாஸர் தொகுத்து வழங்கினார். பேரவை நிலைய செயலாளர் முஹம்மது இப்ராஹிம் அர்ஷாத் வரவேற்புரையாற்றினார். பேரவை துணைத்தலைவர்கள் முறையே டி.கே.சாகுல் ஹமீது, கே.எம்.முஹம்மது அலி, பேரவை பொருளாளர் பன்ருட்டி எம்.முஹம்மது ஜக்கரிய்யா, பேரவை துணைச் செயலாளர் கே.எம்.சம்சுல் ஆலம், பேரவை செயற்குழு உறுப்பினர்கள் முறையே எம்.ஏ.முஹம்மது இம்தாதுல்லாஹ், எம்.முஹம்மது நூஹ், அல்-கர்ஜ் காயிதே மில்லத் பேரவை செயலாளர் கே.ஏ.ஷேக் உதுமான், தம்மாம் காயிதே மில்லத் பேரவை முஹம்மது கோயா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பேரவை தலைவர் கலந்தரி சுலைமான் பைஜி தலைமையுரையாற்றினார். காயல் நல மன்றத்தைச் சார்ந்த முஹம்மது நுஸ்கி, ரியாத் தி.மு.கழக தலைவர் ஜாஹிர் ஹுசைன் கவிதை நடையில் வாழ்த்துரை வழங்கினார். ரியாத் தமிழ்ச்சங்க தலைவர் முஹம்மது இம்தியாஸ், முன்னாள் நிர்வாகி சாகுல் ஹமது, கே.எம்.சி.சியைச் சேர்ந்த அர்ஷத் வேங்காட், செயலாளர் அர்ஷுல் அஹமது, கடையநல்லூர் கே.எம்.டி. நிர்வாகி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள் அடங்கிய நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற தலைவரும், தமிழ் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அறிமுகப்படுத்தி ரியாத் தமிழ்ச்சங்கத் தலைவர் முஹம்மது இம்தியாஸுக்கு வழங்கினார். அந்நூலை ரியாத் காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் பன்ருட்டி எம்.ஜக்கரிய்யா வெளியிட பேரவை நிலைய செயலாளர் முஹம்மது இப்ராஹிம் அர்ஷாத் பெற்றுக் கொண்டார். மணிச்சுடர் 70 ஆம் ஆண்டு விழா மலரை பேரவை துணைத்தலைவர் முஹம்மது அலி வெளியிட பேரவை செய்தித் தொடர்புச் செயலாளர் க.கா.செய்யது இபுராகிம் பெற்றுக் கொண்டார். பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு பேரவை சார்பில் பேரவை பொதுச்செயலளார் லால்பேட்டை எஸ்.எம்.முஹம்மது நாஸர் நினைவுக் கேடயம் வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற தலைவரும், தமிழ் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு,

"அனைவரும் மகிழத்தக்க வகையிலே சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களின் தாய்த்திருச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் அங்கீகரிக்கப்பட்ட ரியாத் காயிதே மில்லத் பேரவையின் சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்காக இரண்டு மாதங்கள் முன்பிருந்து மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் நண்பர் லால்பேட்டை முஹம்மது நாஸர் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் அனைவருக்கும் மற்றும் வருகை தந்திருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டுகின்றேன். பெரும்பாலும் என்னுடைய தொகுதியான கடையநல்லூரைச் சேர்ந்தவர்கள், நான் பிறந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் பிற ஊர்களைச் சேர்ந்தவர்கள், கே.எம்.சி.சி., ரியாத் தி.மு.க., த.மு.மு.க., உள்ளிட்ட பலரும் என்னைக் காண வந்ததற்கு முதற்கண் என் நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காயிதே மில்லத் பேரவை என்பது வெளிநாடு வாழ் முஸ்லிம் லீகர்களால் முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கப்பட்டு பின்னர் அனைத்து நாடுகளிலும் துவங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும். சவூதி அரேபியாவிலே ரியாத் மாநகரில் துவங்கப்பட்ட காயிதே மில்லத் பேரவை இன்றளவும் சிறப்பான ஆக்கப்பூர்வமான சேவையாற்றி வருகின்றது. குறிப்பாக தற்போது பேரவையின் பொதுச்செயலாளராக இயங்கி வரும் முஹம்மது நாஸர் அவர்களின் பல்வேறு சமுதாயப் பணிகள் பாராட்டுதலுக்குரியது.

எனக்கு முன் பேசியமர்ந்தவர்கள் இந்தியத் திருநாட்டில் நம் சமுதாய மக்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் மற்றும் அந்தப் பிரச்சனைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்ற பல்வேறு கருத்துகளை கேள்விக்கணைகளோடு கேட்டமர்ந்திருக்கின்றார்கள். ஷரீயத்திற்கு எதிரான பிரச்சனைகள் என்பது இன்று மட்டுமல்ல, சுதந்திரத்திற்கு முன்னாலும் ஏற்பட்டிருக்கின்றது. இங்கே மலர்கள் வெளியிடப்பட்டன. மணிச்சுடர் சிறப்பு மலரிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற உரைகளும் நீங்கள் எடுத்துப் படித்துப் பாருங்கள். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தே போதிருந்தே ஷரீயத்திற்கு எதிரான பிரச்சனைகள், ஒலி பெருக்கியில் பாங்கு சொல்வதற்கு பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகள் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருந்தன. காயிதே மில்லத்திற்குப் பிறகு எம்.எம்.பீர் முகம்மது, திருப்பூர் மைதீன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்தப்பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்த பதிவுகளை இந்த நூல்களில் காணலாம். இப்படிப்பட்ட பல்வேறு இந்திய இஸ்லாமியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தான் வேண்டும் என்று அன்றே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் கூறினார்கள்.

இந்தியா பிரிக்கப்பட்டபோது வடமாநிலத்திலுள்ள முஸ்லிம் தலைவர்களெல்லாம் பாகிஸ்தானிற்கு சென்று விட்டனர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தனி மனிதனாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகைத் துவங்கியதற்கு அன்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சொன்ன காரணங்கள் இரண்டு. முதலில் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் லீகர்கள் சுதந்திர போராட்டங்களில் ஆற்றிய மகத்தான தியாகங்கள் மற்றும் அளப்பரிய சேவைகள். முஸ்லிம் லீகைச் சொல்லாமல் இந்திய வரலாற்றை எழுத முடியாது என்பதை ஆணித்தனமாக எடுத்துக்காட்ட. இரண்டாவது, அரசியலில் முஸ்லிம்கள் இருக்க வேண்டும். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களாக இருக்கலாம். அவர்களால் நம் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவோ பேசவோ இயலாது. சென்ற வாரம் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் கூட பேசிய அதன் தலைவர் இந்தியா இந்துயிஸத்திற்கு மட்டும்தான் சொந்தமானது. இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்று பேசினார். இப்படிப்பட்ட எதிர்ப்புகள் இஸ்லாமியர்களுக்கு வரும்போது, அதை தவறு என சுட்டிக்காட்டி இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை எடுத்துக்காட்ட முஸ்லிம் லீக் வேண்டும். இந்திய சட்டமன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்களும் குரல்களும் எழுப்பப்படும்போது அதனை எதிர்த்து இந்திய முஸ்லிம்களின் வாழ்வாதாரங்களையும், பிரதிநிதித்துவத்தையும் எடுத்துக்காட்டவும் நிலைநாட்டவும் நாம் நாமாக இருந்தால்தான் முடியும். இந்த இரண்டு காரணங்களுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்தே தீர வேண்டும் என்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் பறைசாற்றி நமக்கு அமானிதமாக இந்த கட்சியைத் தந்திருக்கின்றார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைத் தவிர்த்து இந்திய வரலாற்றை எழுதவே முடியாது. பிற அமைப்புகளைப் போன்று முஸ்லிம் லீகிற்கு விளம்பரம் தேவையில்லை. முஸ்லிம் லீக் ஆற்றிய தொண்டுகள் சாதனைகள் அளப்பரியது என்பதை அனைவரும் அறிவார்கள். நம்முடைய தாய்ச்சபையின் பிறைக் கொடியைப் பாருங்கள், 112 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க நம் பிறைக் கொடி போன்று வேறு யாருக்கேனும் உண்டா? ஆசியக்கண்டத்திலேயை வேறு எவருக்கும் கிடையாது என்பதே நிதர்சன உண்மை. காங்கிரஸ் கட்சியின் கொடி கூட நாளடைவில் மாற்றப்பட்டது. பிறைக்கொடியின் பசுமை வண்ணம் நாட்டின் இயற்கையின் அடையாளம், நட்சத்திரத்தின் 5 முனைகளும் இஸ்லாத்தின் 5 கடமைகளை பறைசாற்றுகின்றன, கூர்மையான வளர் பிறையானது இஸ்லாம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்பதை எடுத்தியம்பக்கூடியது. இத்தனை சிறப்புமிக்க கொடியை நமக்கு நம்முடைய தலைவர்கள் தந்திருக்கின்றார்கள். முஸ்லிம் லீக் கட்சியானது 1906 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி மாநாட்டிலே முஸ்லிம்களின் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அரசியல் ரீதியாக பெறவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி.

இன்றைய மோடி அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றது. இந்த 4 ஆண்டுகளும் இந்திய இறையாண்மைக்கு எதிராக இஸ்லாமியர்களுக்கு எதிராக சிறுபான்மையினருக்கு எதிராக அனைத்து பிரச்சனைகளும் அரங்கேறியிருக்கின்றது. இன்று 32 மாநிலங்கள் இருக்கின்றது. சுதந்திரத்திற்கு முன்பு 5 மாகாணங்கள் மட்டுமே. அதிலும் 500 குறு நில மன்னர்கள், சிற்றரசர்கள் மற்றும் நவாபுகள் உள்ளடக்கம். அன்றைய தினம் அனைவர்களையும் இந்தியாவுடன் இணைக்கும்போது பெறப்பட்ட உத்திரவாதம் அனைத்து மதத்தினரின் தனித்தன்மை, பண்பாடு, தனி அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்பது. அதன் அடிப்படையிலேதான் அண்ணல் அம்பேத்கரின் தலைமையில் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. மத சுதந்திரங்கள் இயற்றப்பட்டன. அதன் விளக்கம் என்னவெனில், அவரவர் மதத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அனைவரும் அவரவர் மதத்தினைப் பின்பற்றலாம், பிரச்சாரம் செய்யலாம் என்பது.

ஆனால் தற்போது தாய் மதத்திற்கு திரும்புங்கள் என்று கலவரங்களை உருவாக்குகின்றனர். எது தாய் மதம் என்று அவர்களால் அடையாளப்படுத்த முடியுமா? அண்ணல் அம்பேத்கர் ஏன் இந்து மதத்திலிருந்து வெளியேறினார் என்பதை அவர்களால் விளக்க இயலுமா? ஏற்றத்தாழ்வுகள் கண்டு வெளியேறினார். பின்பு மாட்டுக்கறி பிரச்சனைகள். இதுவரை மாட்டுக்கறி பிரச்சனைகளுக்காக 26 நபர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் 24 முஸ்லிம்கள், 4 தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எவ்வளவு கேவலமான பாதுகாப்பற்ற ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. 24 சதவிகித முஸ்லிம்கள் இருக்கக்கூடிய கேரளாவில் 13 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். சச்சார் கமிஷன் மற்றும் ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையின் படி இஸ்லாமியர்களின் கல்வி நிலை தலித் சமுதாய மக்களை விட பின் தங்கிய நிலையில்தான் இருக்கின்றது. இதை நம் சமுதாய மக்கள் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கென கல்லூரிகள் சொற்பமே. கேரளாவில் முஸ்லிம் கல்லூரிகளுக்கு மாற்று மத மாணாக்கர்கள் அதிகம் அதிகமாக சென்று கல்வி பயின்று வருகின்றனர். இருப்பினும் 28 சதவிகித முஸ்லிம்கள் இருக்கின்ற உத்திரப்பிரதேசத்திலும், 32 சதவிகித முஸ்லிம்கள் இருக்கின்ற மேற்கு வங்கத்திலும் இஸ்லாமியர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறிதான். 38 சதவிகித முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ள அஸ்ஸாமில் ஓட்டுரிமை கூட இல்லாமல் இருக்கின்றனர் நம் சமுதாய மக்கள் என்பது நிதர்சன உண்மை. இதற்குக் காரணம் நம் சமுதாய மக்கள் அரசியல் ரீதியாக பல்வேறு அமைப்புகளாக பிரிந்து கிடப்பதினால்தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாம் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துகின்றோம். தீர்வு கண்டோமா என்றால் இல்லை. நமது வாக்கு வங்கியை பிறர் வியாபாரமாக்கி விட்டனர். அந்நிலை மாற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே அமைப்பில் ஒன்று கூட வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்னரே இட ஒதுக்கீட்டைப் பெற்ற ஒரே மாநிலம் கேரளா. அதன் மூலாதாரமே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் என்பது அசைக்க முடியாத உண்மை. காரணம் அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் பேச்சைக் கேட்டனர். அதனால் கல்வி அமைச்சகத்தை தன்னகத்தே கொண்டு நம் சமுதாய மக்களுக்கு கல்வியிலும் அதிமதிகம் இட ஒதுக்கீட்டைப் பெற்றனர். முஸ்லிம்களின் கல்வித்தரத்தை மேலும் உயர்த்தினர். ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு கேரளா நண்பர்கள் உதாரணம்

வெளிநாடுவாழ் அமைச்சகம் கேரளாவில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. தமிழகத்திலே அயல்நாடு வாழ் அமைச்சகம் வேண்டுமென்ற ரியாத் காயிதே மில்லத் பேரவை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் கோரிக்கையை அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்திலே வைத்தோம். செய்து தருவதாக சொன்னார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே தற்போதைய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தால், துறை சார்ந்த அமைச்சர்களுக்கே என்னவென்று தெரியவில்லை. மேலும் கோரிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றோம். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அதற்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.

நமது சமுதாயத்தில் முதன்மையாக முஹல்லா ஜமாஅத் கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். முஹல்லா ஜமாஅத்துகளை கவுரவித்து விருதுகளை வழங்கும் ஒரே இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான். முஹல்லா ஜமாஅத்தால் நாம் ஒன்றுபட்டு நம்முடைய பிரச்சனைகளை ஷரீஅத் படி நாமே சரிசெய்து கொள்ள முனைப்பட வேண்டும். நம்முடைய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் சொன்னார்கள், ஒரு ஊரிலே முஹல்லா ஜமாஅத்தை நீக்கி விட்டு முஸ்லிம் லீகை செயல்படுத்த வேண்டும் என்று சொன்னால் அங்கு முஸ்லிம் லீக் தேவையில்லை முஹல்லா ஜமாஅத்தான் வேண்டும் என்று கூறினார்கள். அப்படிப்பட்ட அமைப்பை பிற அமைப்புகள் யாருமே கண்டுகொள்வது கூட இல்லை. பிற அமைப்புகளுக்கு அவரவர் அமைப்புகள் பெரிதாக தெரியலாம். ஆனால் அமைப்பை விட நம் சமுதாயமே பெரிது என்று நினைக்கக்கூடிய ஒரே பேரியக்கம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான்.

கட்டிய மனைவியை கண்டுகொள்ளாத மோடி முஸ்லிம் பெண்களுக்காக பொது சிவில் சட்டம் கொண்டு வந்து கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஷரீஅத்திலே பெண்களுக்கு சொத்துரிமை முதல் மறுமண உரிமை முதல் அனைத்து உரிமைகளையும் தந்த மார்க்கம் நம் தலைவர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித்தந்த மார்க்கம். ஷரீஅத்திற்கு நிகரான சட்டத்தை வேறு யாராவது தர முடியுமா என்று காயிதே மில்லத் அவர்கள் சட்டசபையில் சவால் விட்டு கேட்டபோது யாராலும் பதில் கூற இயலவில்லை. முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் 12 மணி நேரம் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திலே ஷரீயத் சட்டத்தைப் பற்றி பேசி அதற்கு அங்கீகாரமும் பெற்றுத்தந்தார்கள். அன்றைய பாரத பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களால் பனாத்வாலா சாஹிபு அவர்களின் பரிந்துரை ஏற்கப்பட்டு ஷரீஅத் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்பு பிரதமர் சொன்ன வார்த்தை “ஷரீஅத் சட்டத்தில் பெண்களுக்கு இத்தனை உரிமைகள் இருக்கிறதென்றால் அனைத்து சமுதாய பெண்களாலும் இந்த சட்டம் அங்கீகரிக்கப்படும்” என்றார். இது பாராளுமன்ற உரையிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்றைய ஆட்சியாளர்கள் இந்திய முஸ்லிம்கள் மீது பல்வேறு பிரச்சனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாமும் உடனே வீதிக்கு வந்து போராட்டத்தைக் கையிலெடுக்கின்றோம். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய இஸ்லாமியர்களை வேலை வாய்ப்பில் கவனம் செலுத்தவிடக்கூடாது, கல்வியில் கவனம் செலுத்த விடக்கூடாது, எப்போதும் இந்திய முஸ்லிம்கள் வீதியில் இறங்கி போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தம். அனைவரும் இதனை சிந்தித்துப்பார்க்க வேண்டும். வரலாற்றை மறைத்து சிதைத்து சிலர் கூறுகின்றனர் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களுக்குப் பங்கு இல்லை என்று. அவர்களுக்கு சவால் விட்டுக் கூறிக்கொண்டிருக்கின்றோம், ஆங்கிலேயர்களுடனான இந்திய சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மூன்று பேர்களும் முஸ்லிம்கள்தான் என்ற வரலாற்று உண்மை இங்கே எத்தனைபேர்களுக்குத் தெரியும். அந்த மூன்று பேர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச்சார்ந்த முஹம்மது அலி ஜின்னா, காங்கிரஸைச் சார்ந்த அபுல் கலாம் ஆசாத், தனி மன்னர்களாக இருந்தவர்கள் சார்பாக நவாப் உள்ளிட்டோர். இந்திய முஸ்லிம்கள் வரலாற்றை திட்டமிட்டு மறைக்கப் பார்க்கின்றனர். எனவே சகோதரர்களே சிந்தித்து செயல்பட வேண்டும். நம்மை அழிக்க நமது உணர்ச்சிகளை தூண்டும் விதமாக பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றது. தாம்பரம் மாநாட்டிலே தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் கலைஞர் அவர்களிடத்திலே வைத்த கோரிக்கை “முதல்வர் அவர்களே என் சமுதாயத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் உணர்ச்சிவசத்தால் தவறு செய்து சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றனர். அண்ணா 100 ஆவது ஆண்டு விழாவில் கருணை கொண்டு அவர்களை விடுதலை செய்து அவர்களின் குடும்பங்களைக் காக்க வேண்டும். வெளியில் வரும் அவர்களின் நன்னடத்தைக்கு நான் பொறுப்பேற்கின்றேன் இந்திய யூனியன் முஸ்லிம் பொருப்பேற்கும்” என்றார்கள். சிலர் வெளியிடப்பட்டார்கள். இன்னமும் சிலர் சிறையிலே இருக்கின்றனர். அதற்குக் காரணம் நாம் ஒற்றுமையின்றி இருப்பதால்தான்.

இந்திய அரசிற்கு சேர்ந்த முதல் பெரிய சொத்து என்பது இரானுவத்திற்கு சேர்ந்த சொத்து. இரண்டாவது இரயில்வே துறைக்கு சேர்ந்த சொத்து. மூன்றாவது வக்ஃபு வாரியத்திற்கு சேர்ந்த சொத்து. நமது வக்ஃபு வாரிய சொத்துகள் 50 சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அதை நாம் ஒன்றுபட்டுதான் மீட்டெடுக்க வேண்டும். மீட்டெடுத்து நம் சமுதாய மக்களுக்காக மருத்துவம், படிப்பு போன்றவற்றில் நம் செயல்படுத்த முனைய வேண்டும். பைத்துல்மால்களை உருவாக்க வேண்டும். தற்போது கூட தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உறுப்பினர் தேர்தல் முடிந்து தலைவருக்கான தேர்தல் இன்னமும் நடைபெறவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தலை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. வக்ஃபு வாரிய தலைவரை நியமிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பங்கானது முக்கியத்துவம் வகிக்கும்.

மட்டுமல்லாது, ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்கு என்பது மிகக்குறைவு. இந்தியாவிலே எங்கு எந்த நிகழ்வு நடந்தாலும் கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் அங்கு பத்திக்கையாளராக இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை திரட்டிக் கொண்டிருப்பார். நம் சமுதாயத்தினுடைய நன்மைகளை எடுத்தியம்ப நம் சமுதாயம் பத்திரிக்கைத் துறையிலும் மேன்மையுற வேண்டும். அந்த வகையிலேதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிச்சுடர், பிறை மேடை போன்ற இதழ்களை வெளியிட்டு வருகின்றன. மேலும் நாம் சட்டங்களை அறிந்து வைத்திருக் வேண்டும். குறிப்பாக சட்டத்துறையில் முஸ்லிம்களின் பங்கு மேன்மையுற வேண்டும். இந்த மாத இறுதியில் பார் கவுன்சில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதில் எத்தனை முஸ்லிம்கள் உள்ளனர் என்றால் மிக மிக சொற்பமே. அந்நிலை மாற வேண்டும். நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய கடையநல்லூர் ஆயக்குடி அமர் சேவா சங்கத்திலே உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகின்றனர். நம் சமுதாய மக்களும் அது போன்ற அளப்பரிய சேவைகளில் கவனம் எடுத்து செயல்பட முனைய வேண்டும்.

கேரள சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த முஹம்மது கோயா அவர்களை அரசிற்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் பணித்தார்கள். அதை அப்படியே ஏற்று செயல்படுத்திய முகம்மது கோயா அவர்களைத் தேடி முதலமைச்சர் பதவி வந்தது என்பதும் வரலாற்று நிகழ்வுகள். எனவே தலைமைக்கு கீழ் பணிய வேண்டுமென்ற நம் இஸ்லாமிய தத்துவத்தையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் செயல்படுத்தி வருகின்றது. ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிக்க வேண்டும் என்ற நம் இஸ்லாமிய முழுமுதற் கெள்கையை பின்பற்றி நாம் ஒன்றிணைந்து நம் தனித்துவத்தை நிலைநாட்ட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டும்." என்று சிறப்புரையாற்றினார்.

இறுதியாக ரியாத் காயிதே மில்லத் பேரவையின் செய்தித் தொடர்புச் செயலாளர் க.கா. செய்யது இபுராகிம் ஆற்றிய நன்றியுரையில் இந்த நல்ல நிகழ்வை ஏற்பாடு செய்த காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் மற்றும் இந்த சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராய் வருகை புரிந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தொகுதியின் செல்லப்பிள்ளையும் உண்மையான செயல் வீரருமான அண்ணன் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் மற்றும் வருகையால் பெருமை பெருமை சேர்த்த காயிதே மில்லத் பேரவை, கே.எம்.சி.சி., ரியாத் தி.மு.க. தமிழ்ச்சங்கம், காயல் நல மன்றம், கடையநல்லூர் கே.எம்.டி. மற்றும் த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் திரளாக பங்கு கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கும், மேலும் நிகழ்ச்சிக்குரிய இடம் மற்றும் ஒலி, ஒளி அமைப்பினை ஏற்பாடு செய்து தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பேரவை சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செய்தித் தொகுப்பு: க.கா.செய்யது இபுராகிம்

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!