கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் - எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்

March 25, 2018

துபை (25 மார்ச் 2018) ஐக்கிய அரபு அமீரகம் கலை இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக நடத்திய "கீழடி எனும் தமிழ் நிலம்" என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழர்கள் குடும்பத்துடன் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

தொல்லியல் ஆராய்ச்சி என்றால் என்ன, அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவம் ஒரு நாகரீகத்தின் தொன்மையினை நிச்சயிக்கும் அடிப்படைகள் குறித்த சிறு முன் குறிப்புடன் ஆரம்பித்த முத்து கிருஷ்ணனின் சிறப்புரையில் பேசப்பட்ட முக்கிய செய்திகள் :

கொண்டாடப்பட வேண்டிய ஆய்வுகள்:

கீழடி அகழ்வாராய்ச்சியைக் கொண்டாடும் தமிழர்கள், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கீழடி கிராம மக்கள், சாமான்யர்கள், ஆய்வாளர்கள் ஆகியோ​ரின் அயராத உழைப்பை மதிக்கும் வகையில் அவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலை​யில் தேனி​ துவங்கி​ மதுரை வழியாக​​ இராமநாதபுரம் வரை நீளும்​ 252 கி.மீ நீளம்​ கொண்ட வைகை ஆற்றுப் படுகை முழுக்க தேடிக் கண்டெடுக்கப்பட்ட இந்த வரலாற்று தொன்மை வாய்ந்த தொல்லியல் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கடும் சிரமங்களுக்கிடையே ஆய்வுகள் மேற்கொண்டு வரும் தமிழ் தொல்லியல் அறிஞர்களை சர்வதேச அளவில் அடையாளம் காண்பித்து நாம் கொண்டாட வேண்டும். கீழடி ஆய்வுக்கான அறிக்கைகள், பல்வேறு மொழிகளில் முக்கியமாக ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப் பட்டால், சர்வதேச அளவில் தமிழரின் தொன்மை சென்று சேரும்.

தமிழர்களை தலை நிமிர்த்தும் ஆய்வறிக்கைகள்:

கீழடி அகழ்வாராய்ச்சி என்பது​ குறைந்தது​ 15 வருடம் ​தொடர வேண்டிய அகழ்வாராய்ச்சி யாகும். ​ஆனால் வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆய்வு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இனி தொடரமுடியாது என மத்திய அரசால் மாநில அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த ஆய்வு முழுமையாக நடந்து முடிக்கப்படும் வரை, தமிழர்கள் மொழியளவில் உணர்ச்சி வசப்படாமல் ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள உதவ வேண்டும். இந்த ஆய்வு பற்றிய விழிப்புணர்வு சர்வதேச அளவில் பரந்து விரிந்துள்ள தமிழர்களிடையே ஏற்பட்டு ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்திட ​அரசுக்கு அழுத்தம்தர வேண்டும்.

வன்முறையற்ற அமைதி சமூகம்:

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ​சுமார் ​5,300 க்கும் மேற்பட்ட பொருட்களில் ஒரேயொரு போர்க் கருவியோ, வன்முறைக்கான ஆயுதங்களோ கிடைக்கவில்லை; அக்கால மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த ஆதாரங்கள் பறை சாற்றுகின்றன.

அகழ்வாராய்ச்சி கொண்டுவரும் அதிர்ச்சி உண்மைகள்:

​15 கிராமங்களுக்கு ஒரு பொது இடுகாடு​ என்ற ரீதியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இடுகாடுகள்​, அனைத்து​ மக்களுக்கானவை. உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு பிரிவினைகள் அன்றைய மக்களிடையே இல்லை; ​ஒரு கிராமத்துக்கே இருதர இடுகாடுகள் போன்ற ​பிரிவினைகள் அனைத்தும் வெகு சமீப நூற்றாண்டுகளில் ஆதிக்க சமூகத்தினரால் உருவாக்கப்பட்டவை என்பது​ இதிலிருந்து​ புலனாகிறது.

ஆய்வில் கண்டெடுக்கபட்ட ஆயிரக்கணக்கான பொருட்களில், வழிபாடு சார்ந்த கடவுள் சிலைகள் ஏதும் கிடைக்க வில்லை. ஆதிமனிதன் உருவம் புனையப்படாத இயற்கையை வழிபட்டானே தவிர, சிலைகளை வழிபடவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. இதில் கிடைத்த அரிய வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்க​, இப்பகுதியிலேயே​ அரசு அருங்காட்சியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு இட வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய உண்மைகளை பறைசாற்றுவதால்தான் கீழடி அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்படும் பூமியானது, மத்திய அரசால் அவசரமாக மூடப்படுகிறது. ஆக, மூடப்படுவது வரலாற்றுச் சின்னங்கள் மட்டுமல்ல...​தமிழர்களின் வரலாற்று​ உண்மைகளும் தான்.

மொழித் திணிப்பு:

இந்தி , சமஸ்கிருதம் ஆகிய மொழித் திணிப்புகளை ஏற்கனவே தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் மத்திய அரசுக்கு , செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மை பெரும் தலைவலியாக உள்ளது.

​கீழடி ஆய்வில் கிடைத்துள்ள ​இத்தகைய ஆதாரங்கள், மத்திய அரசு நிர்பந்திக்க எண்ணும் திட்டங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதால், இந்த ஆய்வின் மேற்பார்வையாளராக நியமிக்கப் பட்டிருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் போன்றோர் அஸ்ஸாம் போன்ற வேறு மாநிலங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டு மாற்றல் செய்யப்படுகின்றனர். அரசு "விரும்பும்" ஆய்வுகளைச் சமர்ப்பிக்க ஏற்ற வகையில் வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்பார்வைக்காக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறார்.

இவ்வாறு அ.முத்துக்கிருஷ்ணன் பேசினார். தொடர்ந்து பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்குப் பொறுமையாக விடையளித்தார்.

இந்நிகழ்ச்சியில் திரு. சசி, திரு. ஆசிஃப் மீரான், எழுத்தாளர் திரு. விஸ்வநாத், திரு. நந்தா, திரு. காவிரி மைந்தன், பெண் எழுத்தாளர் ஜெஸீலா, ஹேமா, ஷோபியா, திரு. குறிஞ் நாதன் மற்றும் பலர் கலந்துரையாடினர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!