குவைத் இஸ்லாமிய சிறப்பு மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா!

April 22, 2018

குவைத் (22 ஏப் 2018): குவைத்தில் இஸ்லாமிய மாநாடு மற்றும் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 13ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு, ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் நூல் ஆய்வரங்க நிகழ்ச்சிகள் “அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!” என்ற கருப்பொருளில் சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் ஏப்ரல் 12, 2018 வியாழன் இரவு குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (13/04/2018) நண்பகல் ஜும்ஆ சிறப்பு நிகழ்ச்சியாகவும், இரவு நிகழ்ச்சி குவைத்தில் முதல் முறையாக ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு நூல் ஆய்வரங்க நிகழ்ச்சிகளாக நடைபெற்றன. சனிக்கிழமை (14/04/2018) இரவு நிறைவு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் சமநிலை சமுதாயம் மாத இதழின் ஆசிரியர், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைச் செயலாளர், விகடன் & சுஜாதா விருதுகள் பெற்ற ஊடகவியலாளர், கவிஞர் மவ்லவீ அஃப்ஜலுல் உலமா இளம் முனைவர் S.N. ஜஃபர் ஸாதிக் ஃபாஜில் பாகவீ M.A., M.Phil., மற்றும் சென்னை நல்லிணக்கப் பேரவையின் தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைச் செயலாளர் சீதக்காதி & தமிழ் மாமணி விருதுகள் பெற்ற பன்னூலாசிரியர், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது M.A., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களின் ஏழு நூல்கள் குவைத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் நூல்களை வெளியிட குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். நூல்கள் வெளியீட்டு விழாவை தொடர்ந்து சிறப்பு நூல் ஆய்வரங்கம் நடைபெற்றது.

இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற நூலிற்கான ஆய்வுரையை வி. சிவகுமார் (தாய்மண் கலை இலக்கியப் பேரவை (விசிக), குவைத்), வீரம் செறிந்த இஸ்லாம் என்ற நூலிற்கான ஆய்வுரையை முனைவர் க. குமார் (மூத்த விஞ்ஞானி, வேளாண்மை & கடல் வளத்துறை அமைச்சகம், குவைத்), இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம் என்ற நூலிற்கான ஆய்வுரையை கவிஞர் வித்யாசாகர் (முகில் பதிப்பகம், குவைத்), தலித் மக்களின் விடுதலைப் பேறு என்ற நூலிற்கான ஆய்வுரையை முகவை S. அப்பாஸ் (இஸ்லாமிய அழைப்பாளர், குவைத்), திருக்குர்ஆனில் பிற சமயம் குறித்த மதிப்பீடுகள் என்ற நூலிற்கான ஆய்வுரையை இரா. சித்தார்த்தன் (திராவிடர் கழகம், குவைத்), தூது வந்த வீரர் என்ற நூலிற்கான ஆய்வுரையை பட்டுக்கோட்டை சத்யன் DEEE (பொதுச்செயலாளர், தமிழோசை கவிஞர் மன்றம், குவைத்) மற்றும் என்ற நூலிற்கான ஆய்வுரையை S. முஹம்மது அப்பாஸ் (அமைப்பாளர், FIDA, குவைத்) ஆகியோர் வழங்கினர்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். சிறப்பு விருந்தினரின் பிரார்த்தனையுடன் நிறைவுற்றன.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். ஆய்வாளர்களுக்கு சிறப்பு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. மூன்று நாட்கள் தொடராக நடைபெற்ற நான்கு நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 1,800 (ஆயிரத்து எட்டு நூறு) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பு மலர், மடக்கோலை, வருட நாட்காட்டி, தேநீர், பழரசம், புனித ஜம்ஜம் நீர், பேரீத்தம் பழம், சிற்றுண்டி மற்றும் இரவு உணவுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!