தூத்துக்குடி தமிழ்ச் சொந்தங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ரியாத் தமிழ் சங்கம் கண்டனம்!

May 28, 2018

ரியாத் (28 மே 2018): தூத்துக்குடி தமிழ் சொந்தங்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ரியாத் தமிழ் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் செயலர் மு.க.செரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது மே 23, 24 ஆகிய தேதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சீருடை அணியாத காவலர்கள், காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று சுடும் காட்சிகளும் சில தொலைக்காட்சிகளில் வெளியாகின. ஆதிக்க வர்க்கத்தின் குருதித் தாகத்திற்கு இன்னுயிர் ஈந்தோர் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகமிருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

தம்முடைய, தம் சந்ததியினருடைய வாழ்வுரிமையைக் காக்கும் நோக்கில் போராடிய அரசியல், கட்சி சார்பற்ற பொதுமக்களின் மீது மாநில காவல்துறை நடத்திய ஈவு இரக்கமற்ற துப்பாக்கிச் சூடு, விடுதலைப் போரில் வெள்ளை ஏகாதிபத்திய இராணுவத்தான் ஜெனரல் டயர் ஜாலியன் வாலா பாஹ்-கில் நிகழ்த்திய வரலாற்றின் குருதிக்கறையை நினைவூட்டும் அரக்கச் செயலாகும்.

சல்ஃபர் டை ஆக்ஸைடு, ஆர்செனிக் ஆகிய நச்சு வாயுக்களை காற்று மண்டலத்தில் கலந்து விடுவதன் மூலம் சூழலுக்கும் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமையும் இந்த ஸ்டெர்லைட் ஆலை குஜராத், மஹாராஷ்ட்ரம் ஆகிய மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றாகும்.

எப்பாடுபட்டேனும் தம் குடிமக்களை காக்க வேண்டிய தமிழகஅரசு,வேதாந்த குழும(அனிலகர்வால்) முதலாளிகளின் நோக்கத்தை வென்றெடுக்கும் போக்கில் அப்பாவி தமிழர் உயிர்களை காவு கொள்வதை நியாயச் சிந்தை உள்ள யாராலும் கிஞ்சிற்றும் ஏற்க இயலாததும் மனித நேயர்களின் கண்டனத்திற்கு உரியதுமாகும்.

தமிழ் மண்ணையும் மக்களையும் காக்க வேண்டிய கடமைப் பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உணர்ந்து, நாசகார சக்திகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளாலும், குறிப்பிட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட வழி காண்பதன் மூலமும் இப்பெருந்துயருக்கு ஆளான தம் குடிமக்களுக்கு சரியான நிவாரணம் வழங்கும்படிபடியும் அவர்களின் வாழ்வுக்கும் வாழ்வாதார அடிப்படை உரிமைகளை விரைவில் வழ இங்கிடும்படி உத்தரவிட தமிழக அரசை ரியாத் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!