கருணாநிதி மறைவுக்கு ஜித்தா சொல்வேந்தர் மன்றம் இரங்கல்!

ஆகஸ்ட் 07, 2018

ஜித்தா (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜித்தா தமிழ் சொல்வேந்தர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் 2017/18 தலைவர் மு. இ. முஹம்மது இபுறாஹிம் மரைக்கார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமாகிய டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவால் வாடும், குடும்பத்தார், கழக உடன்பிறப்புகள் மற்றும் அனைத்து தமிழர்களுக்கும், ஜித்தா சொல்வேந்தர் மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

திருக்குவளை கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த கலைஞர் மு. கருணாநிதி, தன்னுடைய அயராத உழைப்பின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்து திராவிட இயக்கத்தின் ஐம்பதாண்டு கால வரலாற்றின் மையமாக திகழ்ந்தார்.

ஐந்துமுறை தமிழக முதல்வராக இருந்த இவர் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவிடாத வெற்றி வரலாற்றுக்குச் சொந்தக்காரராவார். சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். அவசர நிலை காலத்தின் போது, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அவர் காட்டிய உறுதி மறக்க முடியாததாகும். தமிழை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த சிறந்த தமிழறிஞர், எழுத்தாற்றல் மிகுந்த வசனகர்த்தா, சிந்தனைத் திறன் மிக்க செயல்வீரர் என பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் கலைஞர் மு. கருணாநிதி. அரசியல், ஊடகம், திரைத்துறை, கலை, இலக்கியம், நாடகம், என அனைத்துத் துறைகளிலும் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்தவர்.

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும், ஏன் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது பிரிவால் வாடும் அனைவர்களுக்கும் எங்களது ஜித்தா தமிழ் சொல்வேந்தர் மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!