தமிழகம் முன்னணியில் இருக்க ஓய்வற்று உழைத்த தலைவர்: ரியாத் தமிழ்ச் சங்கம் இரங்கல்!

ஆகஸ்ட் 08, 2018

ரியாத் (07 ஆக 2018): தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் முன்னணி தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி மறைவுக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரியாத் தமிழ்ச்சங்கத் தலைவர் மாலிக் இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கை:

கலைஞர் மு.கருணாநிதி எனும் தலைமைச் சூரியன் முதுமை நோவு காரணமாக இன்று மறைந்து போனதை அறிந்து ரியாத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக் குழுவினரும் செயற்குழுவினரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சிப் பாதையில் தமிழகம் மிகமிக முன்னணியில் நிற்க உழைத்த ஓய்வறியாத் தலைவராக, தமிழின் மூதறிஞராகத் திகழ்ந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஆற்றிய பொதுத்தொண்டுகள் பற்பல.

தமிழில் தனிப்பெரும் ஆற்றலறிஞராக, எழுத்துக்கும் பேச்சுக்கும் என்றும் எடுத்துக் காட்டப்படுபவராக, இதழாளராக, நிர்வாகத் திறமை வாய்ந்த நல்ல தலைவராக விளங்கிய கலைஞர் மு.கருணாநிதியின் மறைவு , தமிழகம் மட்டுமின்றி உண்மையில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பேரிழப்பும் பெருந்துயரமுமாகும்.

அப்பெருமகனாரை இழந்து வாடும் தமிழுக்கும் தமிழகத்திற்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் ரியாத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அப்பெருமகனாரின் வழியில் தமிழினப் பகைவர்களை வெற்றி கொள்ள தமிழர்கள் மத இன பேதம் மறந்து ஒன்றுபடவும் வேண்டுகோள் விடுக்கிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!