எங்களுக்கு பண்டிகைகள் இல்லை - சோகத்தில் வளைகுடா வாழ் கேரள மக்கள்!

August 19, 2018

ரியாத் (19 ஆக 2018): இவ்வருடம் எங்களுக்கு எந்த பண்டிகளும் இல்லை என்று வளைகுடா வாழ் கேரள மக்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதேபோல வளைகுடா நாடுகளும் நிதியுதவிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் வளைகுடாவில் அதிக அளவில் வசிக்கும் கேரள மக்கள் இவ்வருடம் எந்த பண்டிகைகளையும் மகிழ்ச்சியாக கொண்டாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். வரும் 21 ஆம் தேதி வளைகுடா நாடுகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படவுள்ள நிலையில் கேரள மக்கள் அம்மாநிலம் சந்தித்துள்ள மிகப்பெரிய பேரழிவால் சோகமாக உள்ளனர். ஒவோருவர் வீட்டிலும் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் பாதிப்பை சந்தித்துள்ளதால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்ரீத் பண்டிகை மட்டுமல்லாமல் தமிழகத்தின் தீபாவளி போல கேரளாவில் ஓணம் மிகப்பெரிய பண்டிகையாகும். அதனையும் அவர்கள் கொண்டாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். கேரள மக்களின் சோகத்தில் பிற மாநிலத்தவர்களும் பங்கேற்று அவர்களும் கேரள மக்களுக்கு ஆறுதல் கூறி வருவதோடு, பண்டிகை காலங்களில் இருக்கும் வழக்கமான மகிழ்ச்சியை பிற மாநிலத்தவர்களும் இழந்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!