வெளி நாட்டு தொழிலாளர்களுக்கு தொடர் சலுகைகள் வழங்கும் கத்தார்!

September 07, 2018

தோஹா (07 செப் 2018): வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தொடர் சலுகைகளை வழங்கி வரும் கத்தார் அடுத்த அறிவிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தம் விருப்பம்போல் எப்போது வேண்டுமெனிலும் சொந்த நாடு சென்று, திரும்பும் வகையில் கத்தர் சட்டம் இயற்றியுள்ளது.

கத்தரில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், விடுப்பிலோ அல்லது நிரந்தரமாகவோ சொந்த நாடு திரும்ப விரும்பினால், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து எக்ஸிட் அனுமதி பெற வேண்டும். இம்முறையினைக் கத்தர் ரத்து செய்துள்ளது.

இனிமேல், நிறுவனத்தின் அனுமதியில்லாமலேயே தாம் விரும்பும்போது எப்போது வேண்டுமெனிலும் தொழிலாளர்கள் தம் நாடு திரும்பலாம். இதற்கு முன்னர், தொழிலாளர்களிடமிருந்து பாஸ்போர்டைக் கைப்பற்றி வைத்திருப்பதைச் சட்ட விரோதமாக்கியதோடு, அவ்வாறு தொழிலாளர்களின் பாஸ்போர்டைக் கையில் வைத்திருக்கும் நிறுவனங்கள்மீது 10,000 ரியால் அபராதம் விதித்துச் சட்டமியற்றியிருந்தது. இச்சட்டத்தால், தொழிலாளர்களின் கைவசம் அவர்களின் பாஸ்போர்ட் இருக்க வழிவகை செய்யப்பட்டது. தற்போதைய புதியச் சட்டத்தால் தொழிலாளர்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் தாம் விரும்பும் நேரத்தில் சொந்த நாடு திரும்ப முடியும். நிறுவனப் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் நிலையிலுள்ள உயர்பொறுப்பு பணியாளர்களுக்கு மட்டும் இச்சட்டம் பொருந்தாது. அவர்கள் நிறுவன அனுமதி பெற்றே வெளியேற முடியும்.

இதே போன்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் சட்டத்தையும் கத்தர் வகுத்துள்ளது. அரபுநாடுகளில், வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் முதல் நாடு கத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விரு சட்டங்களிலும் கத்தர் அமீர் தமீம் கைழுத்திட்டுள்ள நிலையில், அரசாங்க அறிக்கையில் வெளியாகும் நாளிலிருந்து இச்சட்டங்கள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!