உலகக் கவிஞர்களே ஒன்றுகூடுங்கள்!

September 08, 2018

ரியாத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் முத்தமிழ்க் கலைஞர் நினைவு உலகளாவிய கவிதைப்போட்டிகள் - 2018.

மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 40 ஆயிரம்!

கார்காலம் தொடங்கிவிட்டது. இது கவிஞர்களின் காலமும் கூட. உணர்வுகளுக்கு ஒத்தடம் தரும் தட்பவெப்பச் சூழல், கார்மேகங்களை மட்டுமல்ல காளமேகங்களையும் விட்டு வைப்பதில்லை. நீங்கள் கவிஞர் என்றால் இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்.

வழக்கம் போல இந்த ஆண்டும் ரியாத் தமிழ்ச்சங்கம் - எழுத்துக்கூடம் இந்த ஆண்டுக்கான தனது கவிதைப் போட்டியை அறிவிக்கிறது. இந்த ஆண்டு மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி நினைவாக, முத்தமிழ்க் கலைஞர் நினைவு உலகளாவிய கவிதைப்போட்டி – 2018 என்று இந்தப் போட்டியை அறிவிப்பதில் ரியாத் தமிழ்ச்சங்கம் மகிழ்ச்சியடைகிறது.

உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவருமா? ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் சொற்சித்திரமாக்க இயலுமா? கவிதைகளில் நீங்கள் அழகை ஆராதிக்கலாம். தத்துவங்களை போதிக்கலாம். சமூக அநீதிக்கு எதிராய் புயலாகச் சீறலாம். காதல் உணர்வில் தென்றலாகவும் மாறலாம்.

மலர்களின் மகரந்தப் புன்னகையில் மயங்கலாம். இழந்த ஓர் உயிரை நினைத்து மருகலாம். காதல் சோகத்தில் கண்ணீரில் குளிக்கலாம். மலையின் அழகைப்பாடிக் களிக்கலாம். நெகிழ்ச்சி அனுபவங்களுக்கு உயிரூட்டலாம். உருக்கும் நினைவுகளில் துயராகலாம். எதற்கும் தடை இங்கில்லை. வானத்தின் கீழுள்ள எதுகுறித்தும் நீங்கள் எழுதலாம். என்றாலும் மதநெறி, தனிமனிதத் தாக்குதல் மற்றும் பாலியல் விடயங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

இந்த ஆண்டு இந்தப் போட்டி மரபுக் கவிதைகள் மற்றும் புதுக்கவிதைகள் என்று இரண்டு பிரிவாக அறிவிக்கப்படுகிறது. பரிசுத் தொகைகளும் கடந்த ஆண்டை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை விவரம் :

மரபுக் கவிதைப் போட்டி!
---------------------------------------------
முதல் பரிசு : 7500 இந்திய உரூபாய்கள்.
இரண்டாம் பரிசு : 5000 இந்திய உரூபாய்கள்.
மூன்றாம் பரிசுகள் : 2500 இந்திய உரூபாய்கள்.
ஆறுதல் பரிசுகள் (ஐந்து பேருக்கு) : தலா 1000 இந்திய உரூபாய்கள்.

புதுக் கவிதைப் போட்டி!
---------------------------------------------
முதல் பரிசு : 7500 இந்திய உரூபாய்கள்.
இரண்டாம் பரிசு : 5000 இந்திய உரூபாய்கள்.
மூன்றாம் பரிசுகள் : 2500 இந்திய உரூபாய்கள்.
ஆறுதல் பரிசுகள் (ஐந்து பேருக்கு) : தலா 1000 இந்திய உரூபாய்கள்.

இந்தப் போட்டிகள் உலகின் பல மூலைகளிலும் சிதறிக் கிடக்கும் தமிழ்க் கவிஞர்கள் கவிதைகளின் மூலம் ஒன்று கூடுவதற்கான அரிய வாய்ப்பு. இதில் கலந்து கொள்வதற்கான ஒரே தகுதி தமிழ்க் கவிதை எழுதத் தெரிந்திருக்கவேண்டும் என்பது மட்டுமே.

கற்பனையை விரியுங்கள்... சிறந்த கவிதையை வடியுங்கள்... பரிசுகளை வெல்லுங்கள்... வாழ்த்துகள் !

விதிமுறைகள் :
---------------------------------------------

1. தமிழ் மொழி அறிந்த, உலகின் எந்தப் பகுதியில் வசிப்பவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு இல்லை.
2. நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது; அதன் மீதான மேலதிகக் கருத்து விவாதங்கள் அனுமதிக்கவோஅங்கீகரிக்கவோ படமாட்டாது.
3. ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுஉறுப்பினர்கள் -ஆட்சி மன்றகுழுவினர் - அதன் உள்ளமைப்பு உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
4. குறைந்த அளவில் 15 வரிகளும் அதிகமாய் 40 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.
5. தமிழ்க் குழுமங்கள் மற்றும் நாளேடுகளில் கவிதைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பும் அதன் முடிவுகளும் அறிவிக்கப்படும்.
6. இரண்டு போட்டிகளிலுமே முதல் மூன்று பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுக் கவிதைகளுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
7. இந்தப் போட்டியை எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திற்காகவும் நிறுத்தவோ விதிமுறைகளை மாற்றிக் கட்டமைக்கவோ ரியாத் தமிழ்ச் சங்க அமைப்புக்கு முழு உரிமை உண்டு.
8. கவிதைகளை 01 செப்டம்பர் 2018, 00:00 முதல் அனுப்பத் தொடங்கலாம். படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30 செப்டம்பர் 2018, 23:59 மணி வரை.
9. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள் ரியாத் தமிழ்ச் சங்க ஆண்டு விழா மலரில், வலைத் தளத்தில், மடலாற் குழுமத்தில் உரியவர் பெயரோடு வெளியிடப்படும்.
10. ஒருவரே இரண்டு கவிதைப் போட்டியிலும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் தலா ஒரு கவிதை மட்டுமே எழுத அனுமதி. இரண்டும் தேர்வு பெறும் நிலையில் ஏதேனும் ஒன்று மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

எப்படி கலந்துகொள்வது?
---------------------------------------------

1. கவிதைகளை ஒருங்குறி (Unicode) அமைப்பில் நேரடி மின்னஞ்சலாகவோ அல்லது இணைப்புக் கோப்பாகவோ (Using MS Word) This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
2. கவிதை அனுப்புவோர் தங்களின் முழு அஞ்சல் முகவரி, தொடர்பு தொலைபேசி/அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.
3. கவிதைகள் இந்தப் போட்டிக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். இதுவரை எந்த அச்சு ஊடகத்திலும் - இணையத்திலும் - இணைய மடலாற் குழுமத்திலும் - செய்திக் குழுமங்களிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்ற உறுதிமொழி மற்றும் ஆக்கியவர் கையொப்பமிட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
5. போட்டி முடிவு வரும்வரை முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் கவிதைகளைப் பகிரக் கூடாது.
6. கவிதைகளை அனுப்புகையில் மரபுக் கவிதை என்றால், ‘ரியாத் தமிழ்ச் சங்கம் முத்தமிழ்க் கலைஞர் நினைவு உலகளாவிய மரபுக்கவிதைப் போட்டி – 2018’ என்றும் புதுக்கவிதை என்றால், ‘ரியாத் தமிழ்ச் சங்கம் முத்தமிழ்க் கலைஞர் நினைவு உலகளாவிய புதுக்கவிதைப் போட்டி - 2018’ என அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

கவிதைக்கான தலைப்புகள்:
---------------------------------------------
1. உனக்குள் நிறையும் உலகு
2. நினைவுகளில் வாழ்கிறாய் நீ
3. மாநிலம் கண்ட மதிப்பு
4. வானம் நிறைவென வாழ்
5. நிழல்தேடி வந்த நிலா
6. பாவம் அழித்த பழி
7. மழையில் நனைந்த மனம்
8. போராடி வெற்றிநடை போடு
9. கண்ணில் நிறைந்த கனவு
10. பெருமிதம் கொள்ளும் பிறப்பு
11. தேடலாய்ப் பெய்கிறது தேன்
12. நீர்தேடி வந்த நிலம்
13. தரையில் விதைத்த தமிழ்
14. வண்டுண்ண வந்த மலர்
15. விழியில் விழுந்த விதை

இந்த 15 தலைப்புகளில் *ஏதாவது ஒன்றை மட்டும்* எடுத்துக்கொண்டு அந்தத் தலைப்பில் ஒரு மரபுக்கவிதையோ அல்லது புதுக்கவிதையோ எழுதி அனுப்பலாம். இரண்டு கவிதைகள் எழுத விரும்புவோர் இரண்டு வெவ்வேறு தலைப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.

இங்ஙனம்,

நெறியாள்கைக் குழு,
ரியாத் தமிழ்ச்சங்கம்,
ரியாத், சவூதி அரேபியா

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!