குவைத்தில் அதிகரிக்கும் சைபர் திருட்டு!

October 30, 2018

குவைத் (30 அக் 2018): ஏமாற்று தொலைபேசி அழைப்புகள் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பெரிய தொகை திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊழியர் ஒருவரை வைபர் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு நீங்கள் குவைத் தினார் 20,000 (சுமார் ரூ.48 லட்சம்) வென்றுள்ளீர்கள் என்று கூறியுள்ளார். அந்தத் தொகையை உங்களுடைய வாங்கிக்கணக்குக்கு அனுப்புவதற்கு உங்களுடைய ATM அட்டை எண், அதன் ரகசிய குறியீட்டு எண் (பாஸ்வேர்ட்) மற்றும் குடியுரிமை அட்டை எண் ஆகிய விபரங்களைத் தாருங்கள் எனக் கேட்டுள்ளார். விபரமறியாத அந்த ஊழியர் அனைத்து விபரங்களையும் கொடுத்துவிட, அவருடைய வங்கிக்கணக்கில் இருந்த குவைத் தினார் 2,527 (சுமார் ரூ. 6.12 லட்சம்) திருடப்பட்டுள்ளது. இது குறித்து அஹ்மதி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் ஏமாற்றப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.

இதே போன்று மற்றொரு சம்பவம் ஃபஹாஹீல் பகுதியில் நடைப்பெற்றுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் குவைத் தினார் 10,000 (சுமார் ரூ.24 லட்சம்) வென்றுள்ளீர்கள் என்று கூறியுள்ளார். அதை நம்பி இவரும் அனைத்து விபரங்களையும் கொடுத்துவிட இவருடைய வங்கிக்கணக்கில் இருந்த குவைத் தினார் 9,000 (சுமார் ரூ. 21.7 லட்சம்) திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஃபஹாஹீல் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் ஏமாற்றப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற திருட்டுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு குவைத் வங்கிச் சங்கத்தின் பொதுச்செயலாளர் முனைவர் ஹமத் அல் ஹஸ்ஸாவி, சில மாதங்களுக்கு முன்னர் வங்கிப் பயனார்களைக் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு வங்கியும் பயனாளர்களின் ரகசிய குறியீட்டு எண்ணைக் கேட்காது என்றும் பயனாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை எவரிடத்தும் கொடுக்க வேண்டாம் என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் வலியுறுத்தினார்.

செய்தியாளர்: சுல்தான், குவைத்

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!