இஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்!

Share this News:

பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு முடிவு வராமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பேயில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமது அல்தானி கூறியுள்ளார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுசபை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கத்தர் அமீர், அரபு பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தும் அராஜகங்களுக்கு முடிவு கொண்டு வரும் விசயத்தில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபை முதலான சர்வதேச நிறுவனங்களும் கண்மூடி இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தார்.

அரபு பிரதேசத்தின் மீதும் ஃபலஸ்தீனிலும் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் இஸ்ரேல் காலில் போட்டு மிதிக்கிறது. ஃபலஸ்தீனின் பகுதிகள் மீது தொடர்ந்து ஆக்ரமிப்பு நடத்துகிறது. காஸா பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித முயற்சியையும் சர்வதேச சமூகம் முன்னெடுப்பதாக தெரியவில்லை. சர்வதேச விதிமுறைகளைக் காலில் போட்டு மிதிக்கும் இஸ்ரேலின் இத்தகைய அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத சர்வதேச சமூகங்களாலும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களாலும் என்ன பயன்? 1967 ல் நிச்சயித்த எல்லைபடியான இரு நாடு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி, ஃபலஸ்தீனில் இஸ்ரேல் ஆக்ரமித்துள்ள இடங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறாதவரை அரபு பகுதியில் அமைதி என்ற பேச்சு அர்த்தமற்றது என்று தம் பேச்சினிடையே குறிப்பிட்டுள்ளார்.

அரபு அமைதிக்கான முன்னெடுப்பு ஒன்றை சவூதி அரேபியா 2002 ஆம் ஆண்டு முன்வைத்தது. இதனைச் சர்வதேச நாடுகள் அனைத்தும் அங்கீகரித்தன. அந்த ஒப்பந்தப்படி,

– 1967 ல் வரையறுத்த எல்லைபடி ஃபலஸ்தீன் தனிநாடு உருவாகும்.
– கிழக்கு ஜெருசலம் ஃபலஸ்தீனின் தலைநகராகும்
– ஃபலஸ்தீன் பகுதிகளில் ஆக்ரமிப்பை இஸ்ரேல் நிறுத்தும்
– ஃபலஸ்தீனில் ஆக்ரமித்த இடங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறும்
– ஃபலஸ்தீன் அகதிகள் ஃபலஸ்தீனுக்குத் திரும்ப அனுமதிக்கப்படும்.

இவை செயல்படுத்தப்படும் பட்சத்தில், இஸ்ரேலுடனான ராஜாங்க உறவுகளை அரபு நாடுகள் தொடங்கும்.

இதுவே அரபு அமைதி ஒப்பந்தத்தின் ஷரத்துகள்.

ஆனால்,

இந்த ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்கா தன்னுடைய இஸ்ரேலுக்கான தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றி இஸ்ரேல் ஃபலஸ்தீனிடமிருந்து ஆக்ரமித்த ஜெரூசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வரலாற்று துரோகம் செய்தது. இதற்கு எதிராக ஒன்று திரள வேண்டிய அரபு நாடுகள், அதனை மறந்து ஒவ்வொன்றாக போட்டி போட்டு கொண்டு இஸ்ரேலுடன் உறவு வைக்க ஆரம்பித்துள்ளன. எகிப்து, ஜோர்டான் வரிசையில் சமீபத்தில் ஐக்கிய அமீரகமும் பெஹ்ரைனும் இஸ்ரேலுடன் ராஜாங்க உறவை ஆரம்பித்தன. இதற்கு சவூதி மவுன சம்மதம் கொடுத்து அமைதி காக்கிறது.

இந்நிலையிலேயே,

2002 ல் சவூதி முன் வைத்து, சர்வதேச நாடுகள் அங்கீகரித்த அரபு அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஃபலஸ்தீன் நாடு உருவாகாமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பேயில்லை எனவும் சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் இவ்விசயத்தில் சரியான கவனம் செலுத்த வேண்டுமெனவும் கத்தர் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானி ஐக்கிய நாடுகள் சபையில் கோரியுள்ளார்.


Share this News:

Leave a Reply