கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய மாணவி மரணத்தை தொடர்ந்து பள்ளி மூடல்!

தோஹா (14 செப் 2022): கத்தாரில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஸ்பிரிங் ஃபீல்டு இன்டர்நேஷனல் பள்ளியை அரசு மூடியுள்ளது.

நான்கு வயது சிறுமியின் மரணத்தில் பள்ளி ஊழியர்கள் தவறிழைத்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என கல்வி அமைச்சு டுவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளது.

கோட்டயம் சிங்கவனத்தைச் சேர்ந்த அபிலாஷ் சாக்கோ – சௌமியா தம்பதியரின் மகள் மின்சா ஞாயிற்றுக்கிழமை பள்ளி பேருந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை பேருந்தில் தூங்குவதை கவனிக்காத ஊழியர்கள் மற்ற குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டு பஸ்சை பூட்டினர்.

கடும் வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்தது. மதியம் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்தில் சென்றபோது மின்சா பஸ்சுக்குள் மயங்கி கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. மின்சாவின் உடல் நேற்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உடல் இன்று கத்தாரில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் மற்றும் பல்வேறு சமூக தலைவர்கள் மின்சாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஹாட் நியூஸ்: