மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020!

Share this News:

மக்கா (30 ஜூலை 2020): கொரோனா பரவலால் இவ்வருடம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியுடன் இருந்த ஹஜ் யாத்திரை மிகக்குறைந்த ஹஜ் யாத்ரீகர்களுடன் மிகுந்த கட்டுப்பாடுகளுடனும், சமூக இடைவெளியுடனும் தொடங்கியது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 4 மாதங்களாக இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவில் வழிபாடுகளுக்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வருட உம்ராவும் மார்ச் மாதம் இடையில் நிறுத்தப்பட்டது. எனவே இவ்வருடம் ஹஜ்ஜும் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

எனினும் இவ்வருடம் மிகக்குறைந்த யாத்ரீகர்களுடன் ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை சவூதி அரேபிய அரசு செய்திருந்தது.

அதன்படி நேற்று (29 ஜூலை 2020) புதன்கிழமை முதல் ஹஜ் வழிபாடுகள் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஹஜ்ஜுக்கு செல்ல உள்நாட்டில் வசிப்பவர்களில் (வெளிநாட்டினர் உட்பட) சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அனுமதிக்கப்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவின் கஃபாவை சமூக இடைவெளியுடன் வலம் வந்தனர். அப்போது ஹாஜிகள் உலகை அச்சுறுத்தும் கொரோனாவிலிருந்து விடுதலை கோரி இறைவனிடம் அழுது பிரார்த்தித்தனர்.

நேற்று இரவு மினா என்ற முக்கிய பகுதிக்குச் சென்ற ஹஜ் யாத்ரீகர்கள் இன்று அதிகாலை அரஃபாவிற்குச் சென்றனர். இன்று மாலை முஸ்தலிபா என்ற பகுதிக்கு வந்து இரவு தங்குவர். பின்பு மீண்டும் மினா வந்தடைந்து மற்ற ஹஜ் வழிபாடுகளை மேற்கொள்வர்.

முன்னதாக ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹாஜிகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில் அனைவரும் மக்காவிற்கு அனுமதிக்கப்பட்டனர்.


Share this News:

Leave a Reply