2021 ஹஜ் ஏற்பாடுகளை தயாரிக்கும் சவூதி அரேபியா!

524

ரியாத் (15 பிப் 2021): 2021 ஆண்டுக்கான ஹஜ் முன்னேற்பாடுகளை முன்னெடுத்துள்ளது சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்.

சவுதி சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் ஹஜ்ஜிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா நிலைமை நீடிப்பதால், இந்த முறையும் ஹஜ்ஜுக்கு ஒரு சிறப்பு மருத்துவ குழு இருக்கும். இதற்கான நெறிமுறை மற்றும் விதிகளை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தயாரித்து வருகிறது.

சென்ற ஆண்டு கொரோன பரவல் உச்சத்தில் இருந்ததால் உள் நாட்டினரில் மிகக்குறைந்த அளவினருக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஹஜ் யாத்ரீகர்கள் வெளிநாட்டிலிருந்தும் வருவார்கள். இதைக் கருத்தில் கொண்டும் கோவிட் நிலைமையைப் பொறுத்தும் மக்கா மற்றும் மதீனாவில் மருத்துவ முன்னேற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

யாத்ரீகர்கள் வரும் நேரத்திலிருந்து அவர்கள் திரும்பும் வரை தேவையான மருத்துவ வசதிகளை வழங்க ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த விளக்கப் பட்டியலை சுகாதார அமைச்சகம் ஹஜ் உம்ரா அமைச்சகத்திடம் ஒப்படைக்கும்.

ஹஜ் சேவைக்கு வரும் சுகாதார ஊழியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் மருத்துவ பரிசோதனையை முடித்த பின்னர் ஹஜ் சேவைக்கு கொண்டு வரப்படுவர் . ஜூலை மாதம் ஹஜ்ஜுக்கு முன்னதாக சவுதி அரேபியாவில் கோவிட் பரவல் பெருமளவில் தடுக்கப்படும் என்று ஹஜ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் நம்புகிறது.